தினம் ஒரு தகவல் : தோள்பட்டை இறுக்கம்

மூட்டுவாதம் தொடர்பாக 2011-ம் ஆண்டு போன் அண்ட் ஜாய்ன்ட் டெகேட் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், ஐந்தில் ஒருவருக்கு மூட்டுவலி ஏற்படுவதாக தெரியவந்தது.
Published on

இளைஞர்களைவிட 60 வயதை கடந்த முதியவர்களுக்குத்தான் மூட்டு சம்பந்தமான பிரச்சினைகள் அதிகம். இதில், பொதுவாக ஏற்படக்கூடிய பிரச்சினையாக இறுக்கமான தோள்பட்டை எனப்படும் ப்ரோசன் ஷோல்டர் உள்ளது. இந்தியாவில் 2 அல்லது 3 சதவீதம் பேர் இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

சிறுவர்கள் ஸ்கூல் பேக் மாட்டிக்கொள்வது முதல் தொழிலாளிகள் மூட்டை சுமப்பது வரை அடிப்படையாக இருப்பது நமது தோளும் முதுகும்தான். ஆனால் நமது முதுகெலும்பு சுமை தாங்கும் எலும்பல்ல. நமது முதுகெலும்பு, முழங்கால் மூட்டைப் போல கூடுதல் சுமையைத் தாங்கும் எலும்பல்ல. தசைகளும், தசைநார்களும் அதிகம் உள்ள இந்த எலும்பை நாம் தவறான முறையில் பயன்படுத்துகிறோம். அதனால், தோள்பட்டை விறைப்பு போன்ற பிரச்சினைகள் உண்டாகின்றன.

இதை எளிய பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சி மூலம் சரி செய்ய முடியும். தோள்பட்டையை சுற்றி உறை போன்ற அமைப்பு இருக்கும். இந்த அமைப்பில் வீக்கம் ஏற்பட்டு, இறுக்கம் ஏற்படும் நிலையே இறுக்கமான தோள்பட்டை எனப்படுகிறது. இதன் அறிகுறியாக தோள்பட்டை வலி ஏற்பட்டு, கையை தோள்பட்டைக்கு மேல் உயர்த்த முடியாத நிலை, எந்த பக்கம் வலி இருக்கிறதோ அந்த பக்கமாக படுக்கும்போது கடுமையான வலி ஏற்படும். இறுக்கமான தோள்பட்டையால் பாதிக்கப்பட்டவர்கள், ஐந்தில் ஒருவருக்கு மற்றொரு தோள்பட்டையிலும் இறுக்கம் ஏற்படலாம். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு தோள்பட்டைகளிலும் இறுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

ஆண்களைவிட பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் ப்ரோசன் ஷோல்டர் பிரச்சினைக்கு, சிறந்த தீர்வாக பிசியோதெரபி எனப்படும் உடற்பயிற்சி மருத்துவம் விளங்குகிறது. இதில் சரி செய்ய முடியாதபட்சத்தில், சிறு துளை அறுவை சிகிச்சை மூலம் இறுக்கத்தை தளர்த்தி முழுமையாக குணப்படுத்த முடியும். மனபலம் அவசியம்.

இதுபோன்ற உடல் ரீதியாக ஏற்படும் பிரச்சினைகளால், உளவியல் ரீதியான சிக்கல்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. உதாரணமாக, தொடர்ச்சியாக ஏற்படும் மூட்டு வலி காரணமாக அன்றாட பணிகள் பாதிக்கப்படுகின்றன. இயலாமையால் தன்னம்பிக்கை இழந்து, ஒருவித தாழ்வு மனப்பான்மைக்கு இட்டுச் செல்லலாம். மேலும், அடுத்தவர் மீது தேவையற்ற கோபம், வெறுப்பு ஏற்படுகிறது. அதனால், உடல் ரீதியான பலவீனம் ஏற்படும்போது, மன ரீதியாக பலம் பெற பயிற்சி மேற்கொள்வது அவசியம். முடிந்தவரை, சுயமாக முயற்சி செய்வது நல்லது. அப்படி இயலாத பட்சத்தில், மனநல மருத்துவரை அணுக தயக்கம் காட்டக் கூடாது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com