மீண்ட அய்யனார் கோவில் மாசிமக திருவிழா பெரிய குதிரை சிலைக்கு காகிதப்பூ மாலைகள்

பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் மாசிமக திருவிழாவையொட்டி பெரிய குதிரை சிலைக்கு காகிதப் பூ மாலைகள் குவிந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Published on

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில் முன்பு 33 அடி உயரத்தில் ஆசியாவிலேயே உயரமான குதிரை சிலை உள்ளது. இந்த கோவிலில் மாசிமக திருவிழா இரண்டு நாட்கள் நடக்கிறது. மாசிமகத் திருவிழா நேற்று தொடங்கியது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய குதிரை சிலைக்கு காகிதப் பூ மாலைகள் அணிவிப்பது தான். இந்த நிகழ்ச்சி மாசிமகத்தின் முதல் நாள் காலை முதலே தொடங்கிவிட்டது. தமிழகம் எங்கும் இருந்து நேர்த்திக்கடன் வேண்டிக்கொண்ட பக்தர்கள் காகிதப் பூ மாலைகளை லாரி, வேன், கார் போன்ற வாகனங்களில் கொண்டு வந்து நீண்ட வரிசையில் நின்ற அணிவித்தனர். இந்த ஆண்டு பளபளக்கும் பிளாஸ்டிக் மாலைகள் குறைந்து காகிதப் பூ மாலை அதிகமாக அணிவிக்கப்பட்டது. மேலும் பழங்களால் கட்டப்பட்ட மாலையும், பூ மாலையும் அதிகமாக அணிவிக்கப்பட்டது. மேலும் பால்குடம், காவடி, கரும்பு தொட்டில் எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சிறப்பு பஸ்

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக கீரமங்கலம், அறந்தாங்கி, பேராவூரணி, திருச்சிற்றம்பலம், கொத்தமங்கலம், ஆலங்குடி மற்றும் பல ஊர்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன. பக்தர்களுக்காக சிறப்பு சிகிச்சைப் பிரிவும், 108 ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல்வேறு இடங்களில் நீர்மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தது.

கீரமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கூட்டத்தில் சமூக விரோதிகளை கண்டறிய பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

திரளான பக்தர்கள்

திருவிழாவிற்கு புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை மற்றும் பல மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவிலின் பல்வேறு பகுதிகளிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) தெப்ப திருவிழா நடக்கிறது. இதற்கான ஏற் பாடுகளை கோவில் நிர்வாக குழு மற்றும் கிராமமக்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com