திருவாரூர்,
திருவாரூரில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் ஆண்டு பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நாகை மண்டல தலைவர் ராசகோபாலன், முன்னாள் மண்டல தலைவர் லட்சுமிகாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட கருவூல அலுவலர் லலிதா, சங்கத்தின் மாநில தலைவர் மாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
மத்திய அரசு பணியாளர்களுக்கு வழங்கும் மருத்துவபடியை மாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முன்பணம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
ஷேர் ஆட்டோ
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். திருவாரூரில் பொதுமக்கள் நலன் கருதி ஷேர் ஆட்டோ இயக்க வேண்டும். திருவாரூரில் இருந்து சென்னை செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ், மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சென்னை மாம்பலம் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் அரசு முதியோர் இல்லம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், இணைச்செயலாளர் கமலநாதன், மாவட்ட தணிக்கையாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, சங்க நிர்வாகிகள் கலியமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, சண்முகசுந்தரம், செல்லதுரை, செல்வராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைத்தலைவர் மகாலிங்கம் நன்றி கூறினார்.