அரசியலில் ஓய்வுபெற்றாலும், மக்கள் நலவாதியாக ஓய்வு பெறவில்லை - வெங்கையா நாயுடு

அரசியலில் ஓய்வுபெற்றாலும், மக்கள் நலவாதியாக ஓய்வு பெறவில்லை என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.
அரசியலில் ஓய்வுபெற்றாலும், மக்கள் நலவாதியாக ஓய்வு பெறவில்லை - வெங்கையா நாயுடு
Published on

சென்னை,

துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு பதவி ஏற்று 2 ஆண்டுகள் ஆகிறது. அவர் மாநிலங்களவை தலைவராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு 2 ஆண்டுகளில் செய்த பணிகளை ஆவணப்படுத்தும் வகையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தகவல் ஒலிபரப்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் ஏற்பாட்டில், கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல் எனும் தலைப்பில் புத்தகம் தயாரிக்கப்பட்டு உள்ளது.

இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. விழாவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமை தாங்கினார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புத்தகத்தை வெளியிட்டார். இந்த விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலர் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியதாவது:- எல்லா துறைகளிலும் சிறந்தவர்களைக் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும், பொதுவாழ்வில் இருந்து ஓய்வு பெறவில்லை. நான் துனை ஜனாதிபதி ஆக வேண்டும் என நினைத்ததே இல்லை. அறிவை விரிவுபடுத்த தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.

நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திப்பதிலேயே மகிழ்ச்சி. பொது வாழ்வில் உள்ளவர்களிடம் இருந்து கற்று வருகிறேன். 70 வயதை அடைந்தவுடன் அரசியலை விட்டு, சமூக சேவையில் ஈடுபட நினைத்தேன். என்னை தேர்வு செய்வார்கள் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. கூட்டத்திற்கு வாஜ்பாய் வருகிறார் என சுவரில் எழுதிய நான், வாஜ்பாய் அருகில் அமர்ந்து கட்சி தலைவரானேன். வாழ்க்கையின் உச்சத்தை தந்த கட்சியை விட்டு கனத்த இதயத்துடன் வெளியேறினேன்.

சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியதற்கு உலக நாடுகள் இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிக்கின்றன. மோடி அரசின் சீர்திருத்தங்களை உலக நாடுகள் பாராட்டுகின்றன. நாடாளுமன்றம், சட்டமன்றம் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். பிரிவினைகளை விடுத்து அனைவரும் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com