

பெண்கள் பெரும்பாலும் குடும்ப நலனை கருத்தில் கொண்டு தங்கள் விருப்பங்களை ஒதுக்கி வைத்து விடுவார்கள். குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காக எத்தகைய தியாகங்களையும் செய்வதற்கு தயாராக இருப்பார்கள். அவர்கள் விரும்புவதை நிறைவேற்றி வைப்பதற்கு ஆர்வம் காட்டுவார்கள். சிலர் பிள்ளைகளுடன் சேர்ந்து தங்களது சிறு வயது ஆசைக்கனவுகளை நிறைவேற்றுவதும் உண்டு.அப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட வேண்டும் என்பதற்காகவே அவர்கள் விரும்பி கற்கும் விளையாட்டை தானும் கற்று அதில் சாதித்து காட்டி இருக்கிறார், ஓர்பீ ராய். 46 வயதாகும் இவர், இந்திய பாரம்பரிய உடையான சேலை அணிந்து ஸ்கேட்டிங் சாகசம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பலருடைய கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஸ்கேட்டிங் பலகை மீது சேலை அணிந்தபடி சர்வசாதாரணமாக ஏறி, அங்கும் இங்கும் ஸ்டைலாக சுழன்று சாகசத்தில் ஈடுபட்டதை பார்த்து பலரும் பாராட்டி பதிவிட்டிருக்கிறார்கள்.
கனடாவின் டொரோண்டோ பகுதியில் வசிக்கும் இவர், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவரது கணவர் ஸ்கேட்டிங் வீரர். இந்த தம்பதிக்கு மகனும், மகளும் இருக்கிறார்கள். இவர்களில் மகள் தந்தையுடன் சேர்ந்து ஸ்கேட்டிங் பயிற்சி பெற்று வந்திருக்கிறார். மகனும் இணைந்திருக்கிறார். அதனால் பிள்ளைகள் இருவரும் தந்தையுடன் அதிக நேரத்தை செலவிட்டிருக்கிறார்கள்.
அதிலும் தந்தையும், மகளும் ஸ்கேட்டிங் பயிற்சிக்காக அதிக நேரம் செலவிடுவது ஓர்பி ராயை தனிமைப்படுத்திவிட்டது. தானும் அவர்களுடன் சேர்ந்து ஸ்கேட்டிங் பயிற்சி பெற்றால் முழு நேரத்தையும் அவர்களுடனேயே செலவிடலாம் என்று முடிவு செய்தவர், உடனே களம் இறங்கிவிட்டார்.
என் கணவர் ஸ்கேட்டிங் வீரர் என்பதால் குழந்தைகளும் அதில் ஆர்வம் காட்டினார்கள். அவர்கள் ஒன்றாக ஸ்கேட்டிங் செய்வதை பார்த்தபோது மனதுக்குள் ஒருவித நெருடல் ஏற்பட்டது. அவர்களிடம் இருந்து நாம் விலகி இருப்பதாக உணர்ந்தேன். நானும் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிடுவதற்காக ஸ்கேட்டிங் கற்றுக்கொள்ள விரும்பினேன்.
ஆரம்பத்தில் என் கணவர் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் ஸ்கேட்டிங் பயிற்சி பெற விரும்புவது அர்த்தமற்ற செயல் என்று கருதினார். நானோ என் கணவருக்கு தெரியாமல் ஓரளவுக்கு ஸ்கேட்டிங் பயிற்சி பெற்றிருந்தேன். அந்த வீடியோவை அவரிடம் காண்பித்தேன். அதை பார்த்து ஆச்சரியப்பட்டவர், நீ இப்படி ஸ்கேட்டிங் செய்வாய் என்று எதிர்பார்க்கவில்லை. என்னால் இதை நம்பவே முடியவில்லை என்று கூறி ஊக்கப் படுத்தினார் என்பவர் பேச்சில் பெருமிதம் வெளிப் படுகிறது.
ஓர்பி ராய் கணவர் மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து 6 மாதங்கள் தொடர் பயிற்சி பெற்றிருக்கிறார். அதன் பிறகு தடுமாற்றமின்றி ஸ்கேட்டிங் செய்வதற்கு பழகிவிட்டார். சாகசம் செய்வதற்கும் தயாராகிவிட்டார். ஆனால் ஆரம்பத்தில் இவர் ஸ்கேட்டிங் பயிற்சி பெற்றபோது பலரும் ஏளனமாக பார்த்திருக்கிறார்கள்.
அதனை நினைவு கூருபவர், நான் பயிற்சிக்கு தயாராகிக்கொண்டிருந்தபோது ஒரு பெண் ஏளனமாக சிரித்தபடி வீடியோ எடுக்க ஆரம்பித்தார். நான் கண்டுகொள்ளவில்லை. என்னால் ஸ்கேட்டிங் செய்ய முடியாது என்று அவர் நினைத்திருக்கிறார். நான் நன்றாக ஸ்கேட்டிங் செய்வதை பார்த்ததும் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டார்.
இப்போது நான் சிறந்த ஸ்கேட்டராக மாறி இருக்கிறேன். குழந்தைகள் மற்றும் கணவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். எங்களுக்குள் பாசப் பிணைப்பு அதிகமானது. ஒருவரையொருவர் ஊக்குவித்து ஸ்கேட்டிங்கில் பல்வேறு நுணுக்கங்களை கற்றுக்கொண்டோம்.
கொரோனா காலகட்டத்தில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டபோது நிறைய இளம் பெண்கள் சமூக ஊடகங்களில் அடுத்தவர் வீட்டு கதைகளை பேசி பொழுதை கழிப்பதை பார்த்தேன். நானும் அப்படித்தான் வளர்ந்தேன். அப்படி பொழுதை கழிப்பதற்கு பதிலாக ஆக்கப்பூர்வமாக செயல்பட முடிவு செய்தேன். அதுதான் என் வாழ்க்கையை மாற்றியது. எனது ஸ்கேட்டிங் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிடுகிறேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துக்கொண்டிருக்கிறது.
இப்போது நான் குழந்தைகளுடன் ஸ்கேட்டிங் செய்ய பூங்காவிற்கு சென்றால், பொது மக்கள் என்னைப் பார்த்து, நீங்கள் எப்படி ஸ்கேட்டிங் செய்கிறீர்கள்? என்று ஆர்வமாக கேட்கிறார்கள். நான் அவர்களிடம், உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்துங்கள், நீங்களும் வெற்றி பெறுவீர்கள்' என்று கூறி உற்சாகப்படுத்துகிறேன்.