

இளம் வயதில்...
அமெரிக்காவில் உள்ள சியாட்டில் நகரில் 1955-ம் ஆண்டு அக்டோபர் 28-ந் தேதி பிறந்தவர் பில்கேட்ஸ். இவருடைய பெற்றோர் வில்லியம் ஹென்றி கேட்ஸ், தாய் மேரி மேக்ஸ்வெல் ஆவர்.
பில்கேட்சின் தந்தை வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். பொருளா தாரத்தில் வளம்மிக்க குடும்பத்தில் பிறந்த பில்கேட்ஸ் தொடக்கக் கல்வியை லேக் சைட் என்னும் பள்ளியில் படித்தார். பில்கேட்ஸ் தனது 13 வயதிலே கணினியில் புரோகிராம் எழுதத் தொடங்கினார். பில்கேட்சின் ஆவர்வத்தை பார்த்த பள்ளி நிர்வாகம் அவர் கணினி பயிற்சியில் ஈடுபடுவதற்காக பல சலுகைகளை வழங்கியது. பில்கேட்ஸ் தன்னுடைய உயர்கல்வியை ஹார்வேர்டு பல்கலைக் கழகத்தில் படித்து முடித்தார்.
மைக்ரோசாப்ட் நிறுவன வளர்ச்சி
உயர்கல்வியை முடித்த பில்கேட்ஸ் நண்பர் ஒருவரோடு இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை 1975-ம் ஆண்டு தொடங்கினார். தனிநபர் பயன்பாட்டிற்கு தேவையான அனைத்து வசதிகளை செய்து தரக்கூடிய மென்பொருளாக மைக்ரோசாப்ட் மென்பொருட்களை வடிவமைத்து மக்களிடையே பிரபலம் அடைந்தது இந்த நிறுவனம்.
மைக்ரோசாப்டின் தலைமையகம் வாஷிங்டனில் இயங்கி வருகிறது. தன்னம்பிக்கையாலும், முயற்சியாலும் நிறுவனம் வளர்ச்சி பெற பில்கேட்ஸ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். எம்.எஸ்-வின்டோஸ் என்னும் இயங்குதள அமைப்பானது இந்த நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க மென்பொருளாகும். மைக்ரோசாப்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது இந்த இயங்குதளம்தான். உலகில் உள்ள அனைவரையும் கம்ப்யூட்டர் பற்றி அறிய வைத்ததும் இந்த மென்பொருள்தான் என்றால் மிகையில்லை.
இதனால் பில்கேட்ஸ் கணினித்துறையில் பெரும் புகழ் அடைந்தார். உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக உருவெடுத்தது மைக்ரோசாப்ட். இது போலவே எம்.எஸ்.வேர்டு, எக்செல், எம்.எஸ்ஆபீஸ் போன்ற பிரபல மென்பொருட்களையும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தயாரித்து வழங்கியது. உலக அளவில் பரவலாக பயன்படுத்தப்படும் மென்பொருட்களில் இவை இடம் பெறுகிறது.
குடும்ப வாழ்க்கை
கணினி உலகில் பல வெற்றிகளைக் கண்ட பில்கேட்ஸ் 1994-ம் ஆண்டு மெலின்டா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு இரண்டு மகளும், ஒரு மகனும் உள்ளனர். கணினி விற்பனை, மென்பொருள் விற்பனையால் பில்கேட்சின் குடும்பம் உலகின் முதன்மைப் பணக்காரர் என்ற நிலைக்கு உயர்ந்தது. பன்னிரெண்டு ஆண்டுகளாக உலகின் செல்வந்தர் என்ற அந்தஸ்து வகித்தார் பில்கேட்ஸ். இவரது சொத்தின் மதிப்பு 100 மில்லியன் டாலர்களைக் கொண்டது. என்றும் கூறப்படுகிறது.
முக்கிய நோக்கம்
பொதுநலத் தொண்டிலும் ஆர்வம் கொண்டவர் பில்கேட்ஸ். இதற்காக அவர் பில் அண்ட் மெலின்டா கேட்ஸ் பவுண்டேசன் எனும் தொண்டு நிறுவனத்தை 2000-வது ஆண்டில் தொடங்கினார். அறிவியல்துறையில் ஆராய்ச்சி செய்பவர்களை ஊக்கப்படுத்துவதே இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கம் என்று அறிவித்தார். மேலும் பல பொதுத் தொண்டுகளுக்கும் உதவி செய்து வருகிறது இந்த அமைப்பு. பில்கேட்ஸ் முதன்முதலில் 'த ரோட் அகெட்' எனும் நூலை 1995-ம் ஆண்டு வெளியிட்டு பெரும் புகழ் பெற்றார். 1999-ம் ஆண்டு வெளியிடப்பட்ட பிசினஸ் அட் தி ஸ்பீட் ஆப்தாட் என்ற இன்னொரு புகழ்பெற்ற நூலில் வணிகம் மற்றும் தொழில்நுட்பம் குறித்த பல்வேறு அம்சங்களை விளக்கி உள்ளார்.