தினம் ஒரு தகவல் : கண்ணாடியின் வரலாறு

எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆதிமனிதன் கண்ணாடிகளை உபயோகப்படுத்தினான். அந்த கண்ணாடிகள், எரிமலைக் குழம்பு காய்ந்து கெட்டியாகும் போது உண்டானவை. இந்த கட்டிகளை ஆயுதங்கள் செய்வதற்கும், அம்புகள் செய்வதற்கும் பயன்படுத்திக்கொண்டான்.
தினம் ஒரு தகவல் : கண்ணாடியின் வரலாறு
Published on

கண்ணாடிகளை மனிதனே உருவாக்கும் முறை கி.மு. 3 ஆயிரம் ஆண்டில் மத்திய கிழக்கு நாடுகளில் உருவாகி இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். கி.மு. ஆயிரம் ஆண்டில் வெட்ட வெளிகளில் கண்ணாடிக் குழம்புகளை வார்த்து கண்ணாடி செய்யும் முறை எகிப்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பிறகு ரோமானியர்கள் கி.பி. முதல் நூற்றாண்டளவில் கண்ணாடிகளாலான சிறிய பொருட்களை உருவாக்கிக் கொண்டார்கள்.

12-ம் நூற்றாண்டு வரை பாக்தாத் மற்றும் கெய்ரோவில் கண்ணாடி செய்யும் கலை வளர்ந்தது. அதன்பின்பு வெனிஸ் நகரில் இந்த கலை உச்சகட்டம் தொட்டது. பாதரசத்தைப் பயன்படுத்தி முகம் பார்க்கும் கண்ணாடிகளை செயற்கையாக செய்யும் தொழில்நுட்பத்தை அவர்கள் அறிந்திருந்தனர். ஆனால், இந்த நுணுக்கங்களை அவர்கள் ரகசியமாக வைத்திருந்தார்கள். ஆனால், 17-ம் நூற்றாண்டில் இந்த ரகசியம் கசிந்து, ஐரோப்பிய நாடுகள் பலவும் கண்ணாடிகள் செய்தன. 17 முதல் 19-ம் நூற்றாண்டு வரை கண்ணாடிகளால் டெலஸ்கோப், தெர்மாமீட்டர், மைக்ரோஸ்கோப் போன்ற பல அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்தன. இதன் தொடர்ச்சியாக பார்வைக் கோளாறுக்கான கண்ணாடிகள் ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டன.

1903-ம் ஆண்டில்தான் அமெரிக்காவில் ஒரு நிமிடத்தில் ஆயிரக்கணக்கான கண்ணாடிகளை தயாரிக்கும் தானியங்கி எந்திரம் உருவானது. கண்ணாடியில் உள்ள சுத்தத் தன்மையை வைத்தே அது எந்தக் காலத்தில் செய்யப்பட்டது என்பதை கண்டுபிடிக்கலாம். நம் உருவங்களை பிரதிபலிக்கும் கண்ணாடிகள், அந்தந்த காலகட்டத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியையும் பிரதிபலிப்பது ஒரு அழகான ஆச்சரியம்தான்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com