

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த இவர் தோட்டக்கலை நிபுணர். இவரது வீட்டு தோட்டம் தண்ணீர் பாட்டில்களாலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது. கத்தரி, தக்காளி, குடைமிளகாய் உள்பட காய்கறி வகைகளை தண்ணீர் பாட்டில்களிலேயே விளைவித்து அசத்துகிறார்.
வீட்டில் இடப்பற்றாக்குறையை எதிர்கொள்பவர்களுக்கு இந்த யுக்தி பொருத்தமானது. இனிமேல்தான் வீட்டில் செடி வளர்க்கப் போகிறீர்கள் என்றால் பூந்தொட்டி, பானைகளுக்கு பதிலாக தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்த தொடங்குங்கள் என்கிறார்.
பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் கொண்டு செடி வளர்க்கும் முறையையும் விவரிக்கிறார்.
1. பாட்டிலின் அடிப்பகுதியில் செடி வளர்ப்பு
ஒரு லிட்டர் அல்லது இரண்டு லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் பாட்டிலின் அடிப்பகுதியை மட்டும் வெட்டி எடுங்கள். மூடியுடன் இருக்கும் முனை பகுதியை அப்படியே விட்டுவிடுங்கள். மூடியை சுற்றி மூன்று அல்லது நான்கு துளைகளை போட்டுக்கொள்ளுங்கள். பாட்டிலின் அடிப்பகுதியில் வெட்டிய இடத்தில் இரு துளைகளை போட்டு அதில் கயிறு கட்டி தலைகீழாக தொங்க விடுங்கள். பாட்டிலை வெளிச்சமான இடத்தில் தொங்க விடுவது நல்லது. அதேபோல் நான்கைந்து பாட்டில்களை வெட்டி எடுத்து அதில் கயிறு கட்டி வரிசையாக தொங்கவிடலாம். அதனுள் மண் மற்றும் இயற்கை உரக்கலவையை கலந்து விரும்பிய செடியை வளர்க்கலாம். இரண்டு லிட்டர் பாட்டில்களைப் பயன்படுத்தினால், அதில் கேப்சிகம், தக்காளி, மிளகாய் போன்ற செடிகளை எளிதாக வளர்க்கலாம் என்கிறார் சவுத்ரி.
2. ஒரே பாட்டிலில் இரண்டு செடிகள்
ஒரே பாட்டிலில் இரண்டு செடிகள் வளர்ப்பதற்கு ஏதுவாக பாட்டிலின் நடுப்பகுதியில் வெட்டவும். அவற்றுள் அடிப்பகுதி பாட்டிலை தரையில் வைத்து அதில் மண், உரக்கலவை தூவி விதைகளை விதைக்கலாம். மூடியுடன் கூடிய பாட்டில் பகுதியில் இரு துளைகள் போட்டு அதில் கயிறு கட்டி தொங்கவிட்டு செடிகள் வளர்க்கலாம். தண்ணீர் வெளியேறுவதற்கு ஏற்ப பாட்டிலில் நான்கு, ஐந்து துளைகள் போட்டுக்கொள்ள வேண்டும். இதில் அழகு தாவரம் வளர்ப்பதாக இருந்தால் ஸ்பைடர் பிளாண்ட் செடியை தேர்ந்தெடுக்கலாம். காய்கறி பயிர்கள் வளர்க்க விரும்பினால் கொத்தமல்லி மற்றும் புதினா செடிகளை வளர்க்கலாம்.
3. தொங்கும் தொட்டி செடிகள்
பாட்டிலின் நடுப்பகுதியில் செவ்வக வடிவில் ஆழமாக வெட்டிக்கொள்ளவும். அதன் அடிப்பகுதியில் சிறிய பட்டை போன்று இருந்தால் போதுமானது. அதனை வளைத்தால் பாட்டிலின் இரு புறமும் செடிகள் வளர்ப்புக்கு ஏதுவாக காட்சியளிக்கும். அந்த பட்டை பகுதியை பால்கனி கம்பியில் தொங்கவிட்டு இரு புறமும் செடிகள் வளர்க்கலாம். செடிகளுக்கு இயற்கை உரங்கள் பயன்படுத்துவது நன்றாக வளர உதவும்.
4. கிடைமட்ட தொட்டி செடி
பாட்டிலை கிடைமட்டமாக வைத்து நடுவில் சிறிதளவு வெட்டி எடுத்து அதில் மண் நிரப்பி செடிகளை வளர்க்கலாம். பாட்டிலின் நான்கு முனைகளிலும் துளைகள் போட்டுவிட்டால் போதும். எங்கு வேண்டுமானாலும் தொங்கவிடலாம். இந்த வகை பாட்டில்களில் மூலிகை செடிகள், பூக்கள் வளர்க்கலாம். ஒவ்வொரு பாட்டிலிலும் விதவிதமான வண்ணங்களை தீட்டினால் பார்க்க அழகாக இருக்கும். அடிக்கடி தண்ணீர் தெளிப்பதற்கு மட்டும் மறக்காதீர்கள்.
இதுபோன்று பாட்டில்களை வித்தியாசமான வடிவமைப்புகளில் மாற்றி விதவிதமான செடிகளை வளர்க்கலாம்.