

மும்பை
மூன்றாவது ஆய்வறிக்கை
ரிசர்வ் வங்கி நடப்பு நிதி ஆண்டில் (2019-20) மூன்றாவது முறையாக தனது நிதிக்கொள்கை ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. சக்தி கந்ததாஸ் கவர்னராக பொறுப்பேற்ற பிறகு நான்காவது முறையாக இவ்வங்கி தனது கடன் கொள்கை முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது. அவரது தலைமையின் கீழ் 6 உறுப்பினர்களைக் கொண்ட நிதிக்கொள்கை கமிட்டி வட்டி விகிதங்களை நிர்ணயித்து உள்ளது.
நிதிக்கொள்கை கமிட்டியின் 6 உறுப்பினர்களுள் 4 பேர் வட்டி விகிதத்தை 0.35 சதவீதம் குறைக்க வாக்களித்தனர். இரண்டு பேர் 0.25 சதவீதம் குறைக்க ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதங் கள் 0.35 சதவீதம் குறைக்கப்பட்டு முறையே 5.40 சதவீதம் மற்றும் 5.15 சதவீதமாக இருக்கின்றன.
நான்காவது முறையாக...
நீண்ட இடைவெளிக்குப் பின் நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ந் தேதி அன்று வங்கிக் கடன் வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் குறைத்தது. இந்த நிதி ஆண்டில் முதல் முறையாக ஏப்ரல் 5-ந் தேதி வட்டி விகிதங்கள் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டது. ஜூன் மாதத்தில் மேலும் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டது. இப்போது 0.35 சதவீதம் குறைக்கப்பட்டு இருக்கிறது. வங்கிகளின் அவசர நிதி தேவைக்கான கடன் வட்டி 5.65 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகளை பணவீக்கம்தான் நிர்ணயிக்கிறது. எனவே அது பற்றிய மதிப்பீடுகளையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. சில்லரை விலை பணவீக்கம், இரண்டாவது அரையாண்டில் (2019 அக்டோபர்-2020 மார்ச்) 3.5-3.7 சதவீதமாக இருக்கும் என்றும் இவ்வங்கி தெரிவித்து இருக்கிறது.
நடப்பு நிதி ஆண்டில் (2019-20) பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி தனது முந்தைய ஆய்வறிக்கையில் தெரிவித்து இருந்தது. இதனை இப்போது 6.9 சதவீதமாக குறைத்துள்ளது.
அடுத்த ஆய்வுக்கூட்டம்
பாரத ரிசர்வ் வங்கியின் அடுத்த ஆய்வுக் கூட்டம் அக்டோபர் மாத தொடக்கத்தில் நடைபெற உள்ளது. வட்டி விகிதங்கள் பற்றிய அறிவிப்பு அம்மாதம் 4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வெளிவரும்.
முக்கிய அம்சங்கள்
* ரெப்போ ரேட் 5.40 சதவீதமாக குறைப்பு
* ரிவர்ஸ் ரெப்போ ரேட் 5.15 சதவீதமாக குறைந்தது
* நடப்பு நிதி ஆண்டில் (2019-20) பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக இருக்கும்
* இரண்டாவது அரையாண்டில் (2019 அக்டோபர்-2020 மார்ச்) பணவீக்கம் 3.5-3.7 சதவீதமாக இருக்கும்
* அக்டோபர் மாத தொடக்கத்தில் அடுத்த ஆய்வுக்கூட்டம்
* வட்டி விகிதங்கள் குறித்து அக்டோபர் 4-ந் தேதி அறிவிப்பு
புள்ளிவிவரங்கள் அடிப்படையில் நடவடிக்கை - சக்தி கந்ததாஸ் விளக்கம்
பாரத ரிசர்வ் வங்கி நடப்பு 2019-ஆம் ஆண்டில் தொடர்ந்து நான்காவது முறையாக வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. எனவே வட்டி விகிதம் மொத்தம் 1.10 சதவீதம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்ததாஸ் தெரிவித்தார்.
இதற்கு முன் மூன்று முறை வட்டி விகிதங்கள் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டது. இப்போதும் அதே அளவு குறைப்பது போதுமானதாக இருக்காது. அதே சமயம் 0.50 சதவீதம் குறைப்பது மிக அதிகமானதாக இருக்கும். எனவே தற்போதைய நிலைப்பாடு நடுநிலையானது. வட்டி விகிதங்கள் மற்றும் கொள்கை நிலைப்பாடு ஆகியவற்றில் ரிசர்வ் வங்கி முன்னெச்சரிக்கையுடன் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் எப்போதும் போதிய அளவு பணப்புழக்கத்தை அளிக்கிறது என்று அவர் கூறினார்.