பாடலா ? இசையா ? எல்லோர் பங்கும் உண்டு - கவிஞர் காண்டீபன்

இது ஒரு அகநானூற்றுப் போர் ! இரு பெரும் படைப்பாளிகளின் அகப்போர் என கவிஞர் காண்டீபன் தெரிவித்துள்ளார்.
பாடலா ? இசையா ? எல்லோர் பங்கும் உண்டு - கவிஞர் காண்டீபன்
Published on

சென்னை,

இசைஞானி இளையராஜா இசையில், கடந்த 1980-வது ஆண்டு வெளியான 'நிழல்கள்' படத்தின் மூலம் பாடலாசிரியராக திரையுலகில் அறிமுகமானவர் வைரமுத்து. இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற 'இது ஒரு பொன் மாலை பொழுது' என்கின்ற பாடலின் வரிகள் மூலம் வைரமுத்துவும் அதிகம் பேசப்பட்டார்.

பின்னர் அடுத்தடுத்து இளையராஜா தான்இசையமைக்கும் படங்களில் வைரமுத்துவுக்கும் வாய்ப்பு கொடுக்க துவங்கினார். 3 வருடத்தில் முன்னணி பாடலாசிரியராக உயர்ந்த வைரமுத்து இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியுள்ளார்.

அண்மையில் 'படிக்காத பக்கங்கள்' என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற வைரமுத்து, "இசை பெரிதா.. மொழி பெரிதா என்பது இப்பொழுது பெரிய விவாதமாக மாறி உள்ளது. இதில் என்ன சந்தேகம் இசை எவ்வளவு பெரிதோ அவ்வளவு பெரியது மொழி. மொழி எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரியது இசை. இதை புரிந்து கொண்டவர்கள் ஞானி, புரிந்துகொள்ளாதவர்கள் அந்நியானி'' என்று பேசி இருந்தார்.

வைரமுத்துவின் பேச்சு இளையராஜாவை மறைமுகமாக சாடிய வகையில் உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்தனர். வைரமுத்துவின் பேச்சுக்கு இளையராஜாவின் சகோதரர் கங்கையமரன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து இசை பெரிதா? மொழி பெரிதா? என்ற விவாதம் சூடுபிடித்தது. சமூகவலைதளங்களில் பலரும் இது தொடர்பான தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், கவிஞருமான டாக்டர் பி.வி.ஜெகன்மோகன் சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கவிஞர் காண்டீபன் என்ற புனைப்பெயர் கொண்ட டாக்டர் பி. வி. ஜெகன்மோகன்  வெளியிட்ட பதிவில்,

இசையா மொழியா என்ற வாதம் , விவாதம் இரு பெரும் மேதைகளிடையே ஒரு போரை தற்போது உருவாக்கி இருக்கிறது. இது ஒரு புறநானூற்று போர் அல்ல. நேருக்கு நேர் நின்று பொருதும் வாள் போரல்ல. இது ஒரு அகநானூற்றுப் போர்..! இரு பெரும் படைப்பாளிகளின் அகப்போர் .

ஒரு பாடல் உருவாவது என்பது ஒரு மழலை , ஒரு குழந்தை உருவாவது போலத்தான் . பாடல் ஆசிரியர் இதில் விந்து கொடுத்தவன் தந்தையைப் போன்றவன் என்றால் இசையமைப்பாளன் அந்த விந்தை வாங்கி வித்தை செய்து கருவாக்கி சிசுவை உருவாக்குபவன். இதிலே யார் பெரியவன் யார் சிறியவன் என்ற பேதமை தேவையில்லை.

அதுபோக அந்த சிசு உலகில் அடி எடுத்து வைக்கும் போது மருத்துவம் பார்த்தவள், தொப்புள் கொடி அறுத்தவள், அழகான ஆடை அணிவித்து தொட்டிலில் போட்டவர் என அப்பாடலுக்கு பாடியவர் , நடித்தவர், அபிநயம் பிடித்தவர், அந்தப் பாடல் காட்சிகளை ஒளிப்பதிவு செய்தவர் என அனைவரின் பங்கும் அந்த மழலையின் பிறப்பில் உண்டு. எந்த ஒரு சிறப்பான பாடலுக்கும் இந்த ஐவரும் பாராட்டுக்குரியவர்கள் தானே?

சில பாடல்கள் வைர வரிகளுக்கு பெயர் போனது. சில பாடல்களோ தேன் போன்ற குரலுக்கு பெயர் போனது . சில பாடல்கள் இசைக்காகவே புகழடைந்தவை. சில பாடல்களோ நடிப்புக்காக மனதை கவர்ந்தவை என்றால் சில பாடல்கள் நாட்டியம், நடனம் மூலம் புகழ் பெற்றன. சில பாடல்களில் ஒளிப்பதிவு என்று சொன்னால் சில பாடல்கள் அரங்க அழகை (செட்) அந்த அரங்க அழகுக்காகவே புகழ் பெற்றன. மேலாக இயக்குனர் பணியும் குறைவானதல்ல மழலையின் தாய் தந்தைகளை பெற்றவர் என்ற வரிசையில் அவருக்கும் பெருமை போய் சேரும்.

வரிகளால் ரசிகர்களை வெறியேற்றிய பாடல் ஆசிரியர்கள் பலர். பட்டுக்கோட்டையார் பாடல்கள் மக்கள் திலகத்தையே மனம் மயங்கச் செய்த காலம் அது. 'தூங்காதே தம்பி தூங்காதே ' பாடல் நாடோடி மன்னன் படத்தில் ஓடோடி வந்து இளைஞர்களை தட்டி எழுப்பி தமிழில் அக்கால கீதையானது, தேசிய கீதமானது.

கண்ணதாசன் பாடல்களில் எதைச் சொல்வது எதை விடுவது? 'மலர்ந்தும் மலராத பாதி மலர் போல' பாசமலர் தொடுத்தவன் கொடுத்தவன் அல்லவா? வாலியின் பாடல் வலையில் விழாதார் எவர்? அன்பே வா என்று சொல்லி 'புதிய வானம்..புதிய பூமி.. எங்கும் பனி மழை' யல்லவா பொழிய வைத்தார்? 

அடுத்து வந்தவர் கவிப்பேரரசு. அவருக்கு முன்னோர்கள் ...தருமர், பீமன், நகுலன், சகாதேவர்கள் என்றால் இவரோ அர்ச்சுனன் அவதாரமாகவே ஆனார்.  வில்லுக்கு ஒரு விஜயன் என்றால் சொல்லுக்கு ஒரு வைரமுத்து என்று ஆகியது. அவரின் முதல் விழுது 'இது ஒரு பொன் மாலை பொழுது ' அன்னாரின் மொழி செம்மொழி. அவரின் காதல் பாடல்கள் அனைவரின் காதில் தேன் பாய்ச்சியது. வைரமுத்துவின் சிகரமான வரிகள் ரோஜா படத்தில் வந்த "சின்ன சின்ன ஆசை..." இது தற்கால தேசிய கீதம்

வைரமுத்துவின் வைரம் பாய்ந்த வரிகள் தமிழுக்கே வரம். இக்காலத் தமிழ் இவரால் இமயம் தொட்டது. இமயத்தின் உச்சியில் வெற்றிக்கொடி நட்டது.   இவரின் வைர எழுத்துக்கள் இந்த யுகத்தின் வைரல் எழுத்துக்களாய் நொடியில் தமிழ் உள்ளங்களை தொட்டன.

இனி இசைக்கு போவோம் இன்னிசைக்கு போவோம் . எம் எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்திக்கு முன்னும் பல பின்னும் பல நல்லிசை, மெல்லிசை அமைத்த இசையமைப்பாளர்கள் பலர். அவர்களின் இசை பாரம்பரிய இசையாக கொடி கட்டி பறந்த காலம். அந்த மலர் வாசனைக்கு இடையே திடீரென்று ஒரு மண்வாசனை மழை வாசனை தமிழகத்தை கவர்ந்தது.

இயக்குனர்கள் இடையே பாரதிராஜாவும் இசை அமைப்பாளர்கள் இடையே இளையராஜாவும் உதயமானார்கள். கிராமத்து இசையை நகரங்களுக்கு நகர்த்தி புதுப் பரிமாணம் காட்டினார் இளையராஜா. அதன் பின் இசை புயல் வந்தார்.   அவரே ஏ ஆர் ரகுமான். ஆறிலிருந்து 96 வயதினர் வரைக்கும் இளமை துள்ளும் இசை விருந்து இவருடையது. இளையோர் இசைக்கு ஒரு ஏ ஆர் ரகுமான் என்றால் அவருக்குப் பின் அவரைப் பின் தொடர்ந்து பல இளைஞர்கள் இசை உலகில் முத்திரை பதித்துள்ளனர்.

பாடுவோர் ஆடுவோர் கொடுத்த வெற்றி பாடல்களை காண்போம்:-

டி.எம். எஸ்.  சுசீலா ஒரு மைல் கல் என்றால் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஜானகி ஓர் இனிப்பு குரல் இமயங்களாக உலா வந்தனர். 'ஆயிரம் நிலவே வா' என்ற முதல் பாடல் முதல் ஆயிரம் ஆவது பாடல் வரை...அவர் அவரேதான்.  நிறைய பேர் இன்று நன்றாகவே பாடுகிறார்கள் யாரைச் சொல்ல யாரை விட ? ஆடிக் கவர்ந்தவர்களில் நடிகைகளே முன்னணி ! பத்மினி முதல் ஜெயலலிதா வரை அழகு பதுமைகளின் நடனத்தில் அரங்கமே ஆடியது. ஆண்கள் மெல்லத்தான் ஆடும் கலையில் ஆளுமை பெற்றனர். கமல் முதல் சிரஞ்சீவி வரை நடனத்தில் புதிய திருப்புமுனையை கொண்டு வந்தார்கள். ஆனால் வரலாறு படைத்தவர் என்னவோ பிரபுதேவா தான்.

பிரபுதேவாவின் நடனம் இமயம். காதலன் படம் மூலம் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சனை உலகே பார்த்து வியந்தது. இந்தியாவே பெருமைப்பட்டது, தமிழ்நாடு கருவப்பட்டது. ராகவா லாரன்ஸ் அவரை பின்தொடர்ந்தார் இன்றைக்கு நிறைய இளம் நடிகர்கள் நன்றாகவே நடனமாடுகிறார்கள்.

நடிப்பு:-

ஏராளமான நல்ல நடிகர் நடிகைகள் நமது தமிழ் திரையுலகத்திற்கு கிடைத்தார்கள். நடிகர்களில் பாலையா முதல் சுப்பையா, எஸ் வி ரங்காராவ் போன்ற ஏராளமான சிறப்பான நடிகர்கள் கிடைத்தார்கள். நடிகைகளில் கண்ணாம்பா முதல் சாவித்திரி வரையிலான மிகச்சிறந்த நடிகைகளும் தமிழ் திரையுலகத்திற்கு கிடைத்தார்கள்.

ஆனால் துருவ நட்சத்திரம் என்னவோ நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் துருவ நட்சத்திரம் என்றால் துரு துரு நட்சத்திரம் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆகும். இவர்களின் பாடலுக்கு ஆடாதவர்கள் இல்லை. நடிப்பில் இவர்களைத் தொடர்ந்து விக்ரம், சூர்யா என்று ஒரு புதிய பட்டாளமும் நடிப்பில் பட்டையை கிளப்புகிறார்கள்.

முத்தாய்ப்பாக மொழி (பாடல்) என்கின்ற விதையில் தொடங்கி அழகாக வளர்ந்து வண்ண வண்ண பூக்களை சொரிந்து மலர் மலைகள் ஆகி மக்கள் மனதை மயக்குவது தான் இந்த இசை பயணத்தின் நோக்கமும் வெற்றியும் என்று சொல்லி இதில் எல்லோர் பங்கும் உண்டு

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com