பரஸ்பர நிதி நிறுவனங்களின் சமச்சீர் திட்டங்களில் ரூ.6,865 கோடி முதலீடு

சென்ற நிதி ஆண்டில் 92 சதவீதம் சரிந்தது பரஸ்பர நிதி நிறுவனங்களின் சமச்சீர் திட்டங்களில் ரூ.6,865 கோடி முதலீடு
பரஸ்பர நிதி நிறுவனங்களின் சமச்சீர் திட்டங்களில் ரூ.6,865 கோடி முதலீடு
Published on

சென்ற நிதி ஆண்டில் (2018-19) பரஸ்பர நிதி நிறுவனங்களின் சமச்சீர் திட்டங்களில் முதலீடு 92 சதவீதம் சரிவடைந்து ரூ.6,865 கோடியாக உள்ளது.

நிர்வகிக்கும் சொத்து

பரஸ்பர நிதி நிறுவனங்கள் பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் வாயிலாக முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டுகின்றன. இந்த நிதி, நிறுவனப் பங்குகள், நிதிச்சந்தைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கடன்பத்திரங்கள் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இதுவே பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து என்று அழைக்கப்படுகிறது.

பரஸ்பர நிதி துறையில் ஒவ்வொரு திட்டமும் தனித்தனி சொத்து மதிப்பினை கொண்டுள்ளது. பங்குச்சந்தையில் சரிவு ஏற்படும்போதும், முதலீட்டாளர்கள் அதிக அளவில் தமது முதலீடுகளை விலக்கிக் கொள்ளும்போதும் இத்துறையின் சொத்து மதிப்பு சரிவடைகிறது.

மார்ச் மாதத்தில் பரஸ்பர நிதி நிறுவனங்களின் சொத்து மதிப்பு ரூ.23.79 லட்சம் கோடியாக உயர்ந்து இருக்கிறது. பிப்ரவரி மாதத்தில் அது ரூ.23.16 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, சொத்து மதிப்பு 3 சதவீதம் அதிகரித்துள்ளது.

மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதி ஆண்டில் இத்துறையின் கடன் சார்ந்த முதலீட்டுத் திட்டங்களில் (வருவாய், லிக்விட், நிதிச்சந்தை மற்றும் கில்ட் ஆகியவை) இருந்து சுமார் ரூ.1.25 லட்சம் கோடி விலகி உள்ளது. முந்தைய நிதி ஆண்டில் (2017-18) இந்த திட்டங்களில் இருந்து ரூ.9,128 கோடி மட்டுமே வெளியேறி இருந்தது.

இந்நிலையில், பங்குகளிலும், கடன் சந்தைகளிலும் சமமாக முதலீடு செய்யும் பரஸ்பர நிதி திட்டங்களில் ரூ.6,865 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. 2017-18-ஆம் நிதி ஆண்டில் அது ரூ.89,757 கோடியாக இருந்தது. ஆக, முதலீடு 92 சதவீதம் குறைந்து இருக்கிறது.

சிறிய மற்றும் நடுத்தர நகரங்களில் பரஸ்பர நிதி திட்டங்கள் குறித்தும், அவற்றில் முதலீடு செய்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி, பரஸ்பர நிதி நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. இதன் பலனாக பரஸ்பர நிதி திட்டங்களில் சிறிய மற்றும் நடுத்தர நகரங்களைச் சேர்ந்த முதலீட்டாளர்களின் பங்கு அதிகரித்து வருகிறது.

நிபுணர்கள் துணையுடன்...

பரஸ்பர நிதி நிறுவனங்கள் தேர்ச்சியும், அனுபவமும் வாய்ந்த நிபுணர்கள் துணையுடன் நிதிச்சந்தைகளில் முதலீடு செய்கின்றன. அவர்களுடைய உதவியுடன் இந்நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீடுகளிலும் பங்கேற்கின்றன. புதிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் நேரடியாக இறங்குவதைக் காட்டிலும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்வது ஓரளவு பாதுகாப்பானது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com