

காவிரியில் கர்நாடகத்தில் இருந்து பெற வேண்டிய நீரைப் பெற உரிய முயற்சிகள் இல்லை. கடந்த மாதம் குடி தண்ணீருக்கென்று மேட்டூர் அணையிலிருந்து 8 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. அதன் பிறகு சில நாளில் அதை 6 ஆயிரம் கன அடியாக குறைத்தனர். சில நாள் கழித்து அதை ஆயிரம் கன அடியாக குறைத்தனர். தொடர்ந்து ஆயிரம் கனஅடி தண்ணீர் குடிநீருக்காக மேட்டூரில் இருந்து திறந்துவிடப்படுகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 65 அடியில் இருந்து 51 அடியாக குறைந்துள்ளது.
வழக்கமாக வடகிழக்கு பருவமழை காலத்தில் மேட்டூர் அணையில் சேமிக்கப்படுகிற தண்ணீரை அடிப்படையாக கொண்டு, கர்நாடகத்தில் இருந்து பெறவேண்டிய தண்ணீரில் ஒரு பகுதியைப் பெற்றுத்தான் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறந்துவிடப்படும். கடந்த ஏழு ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்க முடியவில்லை. மேட்டூர் அணையில் முந்திய சாகுபடி பருவத்தின் மிச்ச நீர் சேமிப்பு இல்லாததும், கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட மறுத்ததும்தான் இதற்கு காரணம். இந்த ஆண்டு மேட்டூர் அணையிலிருந்த மிச்ச நீர் சேமிப்பைத் தாராளமாக திறந்துவிடும் தமிழ்நாடு அரசு கர்நாடகத்திலிருந்து கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து மாத வாரியாக வர வேண்டிய நீரைப் பெற முயற்சிகள் எடுக்காதது ஏன்? கர்நாடக அணைகளில் சேமிப்பு நீர் கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு அதிகமாக இருக்கிறது. ஆனால் அந்நீரை தீர்ப்பு வரம்புக்குள் வரும் கே.ஆர்.எஸ்., ஏமாவதி, கபினி, ஏரங்கி அணைகளுக்கு வெளியே கொண்டுபோய் தேக்கிக்கொள்கிறார்கள்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. அதன்பிறகு காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டது. அவ்வப்போது இந்த குழுக்கள் கூடி கர்நாடக அணைகளில் இருந்து மாதவாரியாக தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை திறந்துவிட ஆணையிட வேண்டும். ஆனால் காவிரி ஆணையமும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் 2018 ஜூலை மாதத்துக்கு பிறகு கூடவில்லை. டிசம்பரிலிருந்து மாத வாரியாக தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட எந்த ஆணையும் பிறப்பிக்கவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் செயல்படாமல் முடங்கி கிடக்கிறதா? அல்லது வெளியே தெரியாமல் முடக்கப்பட்டுள்ளதா?
காவிரி தீர்ப்பாயம் 2007-ம் ஆண்டு வழங்கிய இறுதித்தீர்ப்பில் கர்நாடகம் 192 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என்றது. இத்தண்ணீர் மாதவாரியாக வழங்க வேண்டும் என்று கூறியதுடன் மாதவாரியான தண்ணீர் அளவை அதுவே தீர்மானித்தது. உச்சநீதிமன்றம் 16.2.2018 அன்று அளித்த தீர்ப்பில் தண்ணீரின் அளவை 192 டி.எம்.சி.யிலிருந்து 177.25 டி.எம்.சி.யாக குறைத்தது. காவிரி தீர்ப்பாயம் அளித்த மாதவாரி கணக்கை புதிய 177.25 டி.எம்.சி. அளவுக்கேற்ற விகிதத்தில் குறைத்துக்கொள்ளச் சொன்னது. மற்றபடி தீர்ப்பாயம் வழங்கிய இறுதித் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் எதுவும் கை வைக்கவில்லை. தீர்ப்பாயம் கூறியபடி காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் இருக்கும் என்றும், உச்சநீதிமன்றம் கூறியது. ஆனால், காவிரி மேலாண்மை ஆணையம் செயல்படவில்லை. காரணம் என்ன? காவிரி மேலாண்மை ஆணையம். காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றின் தலைவர், செயலர், உறுப்பினர்கள் முழுநேர பணியாளர்களாக செயல்பட வேண்டும் என்பது தீர்ப்பு. ஆனால், இந்திய அரசு வேறு வேறு துறைகளில் முழுநேர தலைவர்களாகவும், அதிகாரிகளாகவும் உள்ளவர்களின் கூடுதல் பணியாக வழங்கி, அவர்களைக் கொண்டு இக்குழுக்களை அமைத்தது. அக்குழுக்களுக்கு முழு அதிகாரத்தையும் இந்திய அரசு வழங்கவில்லை. காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் தலைமையகம் பெங்களூருவில் இருக்க வேண்டும். இதுவரை அவ்வலுவலகம் பெங்களூருவில் அமைக்கப்படவில்லை!
உச்சநீதிமன்ற தீர்ப்பையே நடைமுறையில் செல்லாதது ஆக்கி, ஒரு பொம்மை ஆணையத்தை இந்திய அரசு அமைத்துள்ளது. தமிழ்நாடு அரசு இந்த குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி இவற்றைச் சரி செய்ய ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பில் உள்ளவாறு கர்நாடகம் கடந்த டிசம்பரிலிருந்து வரும் மே 31-க்குள் தமிழ்நாட்டிற்குக் 19.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால் திறந்துவிடவில்லை.
காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றிற்கு உயிர் இருக்கிறதா? பக்ரா நங்கல், நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா தண்ணீர் பிரச்சினைகளில் தீர்ப்பாயங்கள் அளித்த தீர்ப்பைச் செயல்படுத்த அதிகாரமுள்ள முழு நேர வாரியம் அல்லது ஆணையம் அமைத்து அவற்றைச் செயல்படுத்தி வரும் இந்திய அரசு தமிழ்நாட்டில் காவிரி தீர்ப்புக்கு மட்டும் அதிகாரமுள்ள முழுநேர ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழுவை அமைக்காதது ஏன்? அவ்வாறு தன்னதிகாரம் உள்ள முழு நேர பணியுள்ள ஆணையத்தையும், ஒழுங்காற்றுக் குழுவையும் தமிழ்நாடு அரசு கோராதது ஏன்? தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் இதற்கான போராட்டங்களோ, முயற்சிகளோ எடுக்காதது ஏன்? என்ற கேள்விதான் மிஞ்சுகிறது!
பெ.மணியரசன், ஒருங்கிணைப்பாளர், காவிரி உரிமை மீட்பு குழு.