குடைபிடித்து கோடையை கடப்போம்..

சீதோஷ்ண நிலை மாறிக்கொண்டே இருக்கும். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மழைக்காலமும், குளிர்காலமும், கோடைகாலமும் வருடந்தோறும் வந்து போய்க்கொண்டேதான் இருக்கும்.
குடைபிடித்து கோடையை கடப்போம்..
Published on

இப்போது கோடைகாலம் வந்திருக்கிறது. இதனை திண்டாட்டமாக்குவதும், கொண்டாட்டமாக்குவதும் நம் கையில்தான் இருக்கிறது. கோடையை கொண்டாட்டமாக்க என்னவெல்லாம் செய்யலாம்?

முதல் தேவை கோடையை பற்றிய விழிப்புணர்வு. அளவுக்கு அதிகமான சூடு தொடர்ந்து உடலைத் தாக்கும்போது, உடலில் சீதோஷ்ண நிலையை சீராக்கும் கட்டமைப்பு கோளாறு ஆகிவிடும். அதனால் உடல் இயக்கம் சீரற்ற நிலையை அடைந்துவிடும். அப்போது சருமம் வறண்டு சூடாகும். நாடித்துடிப்பு குறையும். கடுமையான தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி, மயக்க நிலை போன்றவை உருவாகும்.

சிலருக்கு தீப்பட்டது போன்று சருமத்தில் கொப்புளங்களும் தோன்றும். இவை அபாயகரமானவை. இந்த நெருக்கடி ஏற்படாமல் இருக்க, அதிக உஷ்ணம் உடலை பாதிக்காத அளவுக்கு பார்த்துக்கொள்ளவேண்டும்.

வெயிலில் நின்றபடியே தொடர்ச்சியாக வேலைபார்க்கவேண்டிய சூழலில் இருப்பவர்கள் இடைஇடையே நிழலில் ஒதுங்கி நிற்கவேண்டும். போதுமான அளவு தண்ணீர் பருகிக்கொண்டிருக்கவேண்டும்.

தண்ணீரில் முக்கிய டவல் கொண்டு உடலை அவ்வப்போது துடைப்பதும் தேவை. முடிந்த அளவு உச்சி வெயில் உடல்மீது படுவதை தவிர்க்கவேண்டும்.கோடைகாலத்தில் கொதித்து ஆறவைத்த நீரையே பருகவேண்டும். ஆனால் சூட்டோடு பருகிவிடக் கூடாது. மூன்று முதல் ஐந்து நிமிடம் வரை கொதிக்கவிட்டு, பின்பு ஆறவைத்து பருகுங்கள். போதுமான அளவு நீர் பருகாவிட்டால் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், சிறுநீரில் தொற்று போன்றவை ஏற்பட்டுவிடும்.

உப்பு சேர்த்த கஞ்சி தண்ணீர், எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர் போன்றவை இந்த காலகட்டத்திற்கு மிகவும் ஏற்றவை. குளிர்பானத்தை முழுமையாக தவிர்த்திடுங்கள். கோடை காலத்தில் வெளியே செல்லும்போது கொதித்து ஆறிய நீரை எப்போதும் உடன்வைத்திருங்கள். தேவைப்படும்போது பருகுங்கள். ஏ.சி, பேன், ஏர்கூலர் போன்றவைகளை அதிகமாக பயன்படுத்தும்போது தாகம் எடுக்காவிட்டாலும் அடிக்கடி சிறிதளவு தண்ணீர் பருகவேண்டும். இல்லாவிட்டால் உடலில் நீரிழப்பு உருவாகிவிடும். வெயிலில் போய் வியர்த்து வழியும் சூழலில், உடனடியாக ஏ.சி. அறைக்குள் புகுந்துகொள்ளக்கூடாது.

இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் மாஸ்க் மற்றும் கையுறை அணிந்துகொள்வது நல்லது. கோடைகாலத்தில் வெயிலால் ஏற்படும் உஷ்ண பிரச்சினை மட்டுமின்றி, காற்றிலும் மாசு மிகுந்து காணப்படும். அவற்றில் இருந்து இவை உங்களை பாதுகாக்கும். அதனால் நடந்து செல்கிறவர்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை குடைபிடித்து செல்லும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டும். உடலில் ஏற்படும் மாசுவை குறைக்க தினமும் இருமுறை சுத்தமான நீரில் குளிப்பதும் நல்லது.

கோடைகாலத்தில் சன் புரட்டெக்ஷன் கிரீமை சருமத்தில் பூசிக்கொள்ளலாம். `சன் புரட்டெக்ஷன் பேக்டர் (எஸ்.பி.எப்) 30'-க்கு குறையாததை வாங்கி பயன்படுத்தவேண்டும். ஒவ்வொருமுறை வெளியே வெயிலில் போய்விட்டு வந்ததும் குளிர்ந்த நீரில் முகம், கழுத்து, கைகால்களை கழுவும் வழக்கத்தை கடைப்பிடிக்கவேண்டும். முகத்தை கழுவுவதால் வெயிலால் ஏற்பட்ட உஷ்ண பாதிப்பு ஓரளவு குறையும்.

இந்த நடைமுறைகளை எல்லாம் கடைப்பிடித்தால் கோடையால் நமக்கு தொந்தரவு ஏற்படாது. கொண்டாட்ட மனோபாவத்தோடு கோடையை கடந்துவிடலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com