சுய ஊரடங்கு கடைப்பிடிக்கும் கிராமம்

கர்நாடகாவில் உள்ள ஒரு கிராமம் சுய ஊரடங்கை கடைப்பிடித்து நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதில் முன் மாதிரியாக திகழ்கிறது.
சுய ஊரடங்கு கடைப்பிடிக்கும் கிராமம்
Published on

கொரோனா இரண்டாவது அலை கிராமப்புறங்களை நோக்கி பரவி வரும் நிலையில் கர்நாடகாவில் உள்ள ஒரு கிராமம் சுய ஊரடங்கை கடைப்பிடித்து நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதில் முன் மாதிரியாக திகழ்கிறது. அந்த கிராமத்தின் பெயர் கடாகி ஷாஹாபூர். யாத்கீர் தாலுகாவில் அமைந்திருக்கும் இந்த கிராமத்தில் கடந்த 16-ந்தேதி முதல் புதிய கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை. கடந்த மாதத்தில் 9 வழக்குகள் பதிவாகி இருந்தது. நோய்த்தொற்று பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்துவிடக்கூடாது என்பதில் கிராம மக்கள் உறுதியாக இருந்தனர்.

கொரோனா தொற்று ஊருக்குள் பரவிவிடாமல் தடுப்பதற்கான முன்னேற்பாடுகளை தாமாகவே முன்வந்து கடைப்பிடிக்க தொடங்கி இருக்கிறார்கள். அனைவரின் ஒத்துழைப்புடன் சுய ஊரடங்கை நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள். இதுபற்றி அந்த கிராமத்தை சேர்ந்த ஷரன கவுடா கூறுகையில், யாத்கீர் மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி நிறைய பேர் அவதிப்படுவதை கேள்விப்பட்டோம். ஆக்சிஜன் பற்றாக்குறை, ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டதை அறிந்து வேதனை அடைந்தோம். அங்குள்ளவர்கள் அனுபவிக்கும் துயரங்களை அறிந்ததும் கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினோம். அப்போது கிராமத்தை விட்டு யாரும் வெளியே செல்லக்கூடாது, கிராமத்திற்குள் வெளியாட்கள் யாரும் நுழைவதற்கு அனுமதிக்கக்கூடாது என்று முடிவெடுத்தோம். கிராமத்தினர் யாரும் வெளியே நடமாடக்கூடாது என்ற கட்டுப்பாட்டையும் தீவிரமாக கடைப்பிடித்தோம். கோவிலில் விளக்கு ஏற்றுவதற்கு மட்டுமே அனுமதி அளித்தோம். கோவிலில் விளக்கு ஏற்றுவதற்கு ஒவ்வொரு வீட்டினரும் எண்ணெய் கொடுத்தார்கள். தேவையில்லாமல் வெளியே நடமாடுவதை தவிர்த்ததற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது என்கிறார்.

கிராம மக்கள் கடைப்பிடிக்கும் சுய ஊரடங்கை அரசு அதிகாரிகள் பாராட்டியுள்ளார்கள். ஹட்டிகுனி ஆரம்ப சுகாதார மையத்தின் மருத்துவ அதிகாரி டாக்டர் ராமகிருஷ்ணா ரெட்டி கூறுகையில், கடந்த மாதம் கடாகி ஷாஹாபூர் கிராமத்தில் ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டதில் 9 வழக்குகள் மட்டும் பதிவானது. அவை அனைத்தும் அறிகுறியற்றவையாக இருந்தன. சமீபத்தில் மீண்டும் மறு பரிசோதனை செய்தபோது எந்த வழக்குகளும் பதிவாகவில்லை. சுழற்சி அடிப்படையில் சில நாட்களுக்கு பிறகு மீண்டும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்படும். இந்த கிராம மக்கள் நல்ல உடல் நலத்துடன் இருப்பதால் கொரோனா வைரஸ் தொற்று வழக்குகள் பதிவாகவில்லை. மேலும் இரண்டாவது அலை தொடங்கியதில் இருந்தே அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறார்கள். அவைதான் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தி இருக்கிறது என்கிறார்.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று முதல் அலை பரவியபோதும் இந்த கிராம மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்துள்ளனர். இந்த கிராம மக்கள் சுகாதாரம், உடல் நலம் மீது அக்கறையோடு செயல்படுகிறார்கள். அதனால்தான் இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முன் வந்திருக்கிறார்கள். நாங்கள் அவர்களை கட்டாயப்படுத்தவில்லை என்கிறார், யாத்கீர் தாசில்தார் சென்னமல்லப்பா.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com