

உறுதியான, சீறிப்பாயும் வகையிலான ஸ்திரமான தோற்றப் பொலிவைக் கொண்டதாக இளைஞர்களை எளிதில் கவரும் வடிவமைப்பு உள்ளதாக இது திகழ்கிறது. நேர் செங்குத்தான வடிவமைப்பிலான எல்.இ.டி. முகப்பு விளக்கு இதற்கு கம்பீரமான தோற்றத்தை அளிக்கிறது. அதற்கு உறுதுணையாக பெரிய அளவிலான பெட்ரோல் டேங்க், அதற்கு இணையான காற்றை கிழித்துச் செல்ல உதவும் விங்லெட் ஆகியன உள்ளன. இதன் பெட்ரோல் டேங்க் 19 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக உள்ளது.
இந்த மாடலில் இருவர் பயணிக்கும் வகையில் தனித்தனி இருக்கைகள் உள்ளன. இதன் ஹேண்டில்பாரும் புதிய வடிவமைப்பில் உள்ளது. முந்தைய மாடலை விட 23 மி.மீ கூடுதல் அகலம் கொண்ட கைப்பிடிகளை உடையதாகத் திகழ்கிறது. இது 999 சி.சி. திறன் கொண்டது. பாரத் புகைவிதி-6 க்கு ஏற்ற தொழில்நுட்பத்தை உள்ளடக்கியது. இது 152 ஹெச்.பி. திறனை 11 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியிலும், 106 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 9,250 ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தும்.
புதிய எல்.சி.டி. டிஸ்பிளே வாகனத்தின் செயல்பாடுகளை துல்லியமாக உணர்த்தும். முன்புறம் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான போர்க், பின்புறம் மோனோ ஷாக் அப்சார்பர் ஆகியன உள்ளன. முன்புறம் 310 மி.மீ. அளவிலான டிஸ்க் பிரேக் உள்ளது.
மெட்டாலிக் டிரைடன் நீலம், கிளாஸ் மேட்கிரே, கிளாஸ் ஸ்பார்க்கிள் கருப்பு வண்ணங்களில் இது கிடைக்கும். முதலில் சர்வதேச சந்தையிலும், அதைத் தொடர்ந்து இந்தியாவிலும் இது அறிமுகப்படுத்தப்படும் என இந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. டயரின் காற்றழுத்தத்தை உணர்த்தும் வசதி இதில் உள்ளது.