நன்றிக்கு இலக்கணமாகத் திகழ்ந்த சிவாஜி

நன்றிக்கு இலக்கணமாகத் திகழ்ந்த சிவாஜி.
நன்றிக்கு இலக்கணமாகத் திகழ்ந்த சிவாஜி
Published on

வேலூர் மாவட்டம், காட்பாடி காந்திநகரைச் சேர்ந்தவர் பி.ஏ.பெருமாள் முதலியார். இவர் நேஷனல் பிக்சர்ஸ் உரிமையாளர். வேலூரில் நேஷனல் தியேட்டர் என்ற ஒரு தியேட்டரையும் நடத்தி வந்தார். இவர் முதன் முதலில் தான் தயாரித்த பராசக்தி' என்ற படத்தில், கணேசன் என்ற நாடக நடிகரை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். அந்த படத்திற்கு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி திரைக்கதை எழுதியிருந்தார். இந்தப் படம் திரை உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. பட்டிதொட்டி எங்கும் ஓடி படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. ஒரே படத்தின் மூலம் கணேசன் புகழின் உச்சியை அடைந்தார். அதைத் தொடர்ந்து அவர் பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். அவர்தான் நடிகர் திலகம் என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிவாஜி கணேசன்.

தன்னை திரை உலகில் அறிமுகப்படுத்திய பெருமாள் முதலியாருக்கு நன்றி செலுத்தும் விதமாக, ஆண்டுதோறும் பொங்கல் அன்று காட்பாடி காந்திநகரில் உள்ள பெருமாள் முதலியார் வீட்டுக்கு தன்னுடைய மனைவி கமலா, நடிகர் பிரபு மற்றும் குடும்பத்தினருடன் வருவார். அங்கு பெருமாள் முதலியார் குடும்பத்தினருக்கு வேட்டி, சட்டை, புடவை உள்ளிட்ட புத்தாடை, பழங்கள் கொடுத்து மரியாதை செலுத்துவார். பின் பெருமாள் முதலியார் தம்பதியிடம் ஆசீர்வாதம் பெற்று திரும்புவார். 1978-ல் பெருமாள் முதலியார் இறந்த பிறகும் கூட அவரது மனைவியை சந்தித்து ஆசிபெறும் வழக்கத்தை வைத்திருந்தார்.

சிவாஜி கணேசன் மறைவிற்குப் பிறகு, அவரது மகன்கள் ராம்குமார், பிரபு ஆகியோர் இந்த நடைமுறையை செய்து வந்தனர். 2014-ம் ஆண்டு பெருமாள் முதலியாரின் மனைவி மீனாட்சி அம்மாள் மறையும் வரை, இந்த வழக்கத்தை சிவாஜி கணேசன் குடும்பத்தார் செய்து வந்தனர். தற்போது பெருமாள் முதலியார் வீட்டில் அவருடைய தம்பி ரங்கநாதன் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டு விசேஷங்களில் சிவாஜிகணேசன் குடும்பத் தினர் இப்போதும் கலந்துகொண்டு வருகின்றனர்.

ஏற்றிவிட்ட ஏணியையே எட்டி உதைக்கும் இந்த காலத்தில், தன்னை திரையுலகில் அறிமுகப்படுத்திய நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியாரை, தான் மட்டுமல்லாமல் தன்னுடைய குடும்பத்தினரும் ஒவ்வொரு ஆண்டும் மரியாதை செலுத்தச் செய்த நடிகர் திலகத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com