

லாட்டரியில் சுமார் ஒன்றரைக் கோடி ரூபாய் பரிசு பெற்ற நிலையிலும் அரசாங்கச் சலுகைகளை அனுபவித்து வந்ததால் அவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
எரிக் புரோஸ் என்ற அந்த 62 வயது நபருக்கு கடந்த 2015-ம் ஆண்டு லாட்டரியில் 1 லட்சத்து 66 ஆயிரம் பவுண்டு (ரூ. 1.49 கோடி) பரிசு விழுந்தது.
அந்த லாட்டரி பணத்தை வைத்து விலை உயர்ந்த கார் வாங்கிய எரிக், அமெரிக்காவில் உள்ள டிஸ்னி வேல்டுக்கு சுற்றுலாவும் சென்றார்.
இந்நிலையில், கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து வீட்டு வசதிச் சலுகை, வேலைவாய்ப்புச் சலுகை போன்றவற்றை எரிக் அனுபவித்து வந்தார்.
அவரிடம் அதிக சேமிப்பு இல்லை என்பதால் சலுகை வழங்கப்பட்டது.
ஆனால் லாட்டரியில் பரிசு விழுந்த பின்னரும் அதை வெளியே தெரிவிக்காமல் சலுகைகளை அனுபவித்து வந்ததாக எரிக் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக எரிக் மீது வழக்கு போடப்பட்ட நிலையில், அவர் மோசடியாக ரூ. 18 லட்சம் அரசுப் பணத்தை பயன்படுத்தியதாகக் கூறப்பட்டது.
இதுதொடர்பாக எரிக் கோர்ட்டில் கூறுகையில், எனக்கு லாட்டரியில் பரிசு விழுந்தது உண்மைதான். ஆனால் அது என் குடும்பத்தின் பணம் என்பதால் நான் அதை வெளியில் சொல்லவில்லை என்றார்.
அதை ஏற்காத கோர்ட்டு, எரிக்குக்கு 24 வாரங்கள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்புக் கூறியுள்ளது.