இவை வெறும் கல் இல்லை!

வரலாற்று சிறப்பு மிகுந்த மாமல்லபுரத்தில் உள்ள புலிக் குகையிலும், கடல் மல்லையிலும் ராஜராஜ சோழரின் நிவந்தங்கள் கூறும் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.
இவை வெறும் கல் இல்லை!
Published on

அவை ராஜராஜசோழன் காலத்தில் பொரித்த கல்வெட்டுகள் என்பதை அறியாமல், அதன் மேல் ஏறி மிதித்து விளையாடுவோரின் எண்ணிக்கை ஏராளம். பல ஆண்டுகளாக இப்படிச் செய்ததன் காரணமாக, அதிரன சண்டேஸ்வரம் கல்வெட்டு, ஒரு சில வரிகள் தவிர மீதம் அழிந்து விட்டது. கடல் மல்லை கல்வெட்டோ தினமும் மக்கள் காலணி கழட்டி விட்டுச்செல்லும் இடமாய் மாறிக்கொண்டிருக்கிறது.

இந்த காட்சிகள் தந்த மனவேதனையில் தோன்றிய கற்பனையே, இங்கே கதையாக...

அவர் வருகிறார் என்றாலே விழாக்கோலம் தான். அன்றும் தொண்டை மண்டலம் விழாக்கோலம் பூண்டிருந்தது. அதிரன சண்டேஸ்வரத்தைச் சுற்றி லட்சோப லட்சம் மக்கள் கூடியிருந்தனர். ராஜராஜ சோழர் வாழ்க என்று குழுமம் குழுமமாய் கூடியிருந்த மக்களிடம் இருந்து எழுந்த கோஷம், அந்த மாமனிதரின் மெய்கீர்த்தியை பாடுவதாக இருந்தது.

கூட்டத்தை கண்டு செய்வதறியாமல் தவித்த நான், அருகில் இருந்த பெரிய மரத்தின் மீது ஏறினேன். எவரும் என்னை கவனிக்காத விதம், அந்த மரத்தின் தடித்த கிளை ஒன்றின் மேல் அமர்ந்தேன். என் பார்வை, கவனம் முழுவதும் அந்த இடத்தை சுற்றியே வட்டமிட்டது. என் ஆடு சதையில் கத்தி ஒன்றையும், இடுப்பில் விஷம் தேய்த்த சிறிய அளவு வீச்சுக் கத்தியையும் சொருகி வைத்தபடி, உன்னிப்பாய் கவனித்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு மனிதனின் செயல்கள், பார்வைகள் என்று எல்லாவற்றிலும் சந்தேக கண்ணோட்டம் அந்த நேரத்தில் அதிகம் தேவைப்பட்டது.

எம் மாமன்னர் வந்திறங்கினார். இம்முறை வெண்பட்டு ஆடை இல்லை. காதுகளிலும், கழுத்திலும் ஆபரணங்கள் இல்லை. அதற்குப் பதிலாக.. இறுக முடிந்த தலையுடன், நெற்றியில் திருநீறு அணிந்து, அங்கவஸ்திரம் ஒன்றை மேலே போர்த்திக்கொண்டு, ஒரு சிவனடியாராகவே காட்சி அளித்தார்.

ஈசனை கண்ட அவரின் முகம் மகிழ்ந்து, இவரைக் கண்ட ஈசனும் மகிழ்ந்து, அங்கு மனிதனுக்கும், இறை வனுக்குமான இடைவெளி குறைந்திருந்தது.

தென்னாடுடைய சிவனே போற்றி என்று எம் மாமன்னர் கண்கள் மூடி வணங்க, என்னாட்டவருக்கும் இறைவா போற்றி என்ற ஓசை கயிலாயத்தில் தியானத்தில் இருந்த ஈசனை தட்டி எழுப்பியது.

சோழ மக்கள் சுற்றி நிற்க, நிவந்தங்கள் (கோவிலுக்கான சேவை) வழங்கும் விழா ஆரம்பித்தது. பொன் கழஞ்சுகளும், நிலங்களும், தங்கமும், பொருட்களும் எம் மாமன்னர் ஒவ்வொன்றாக கூற, ஓலைநாயகம் அதை ஓலையில் குறித்து வைத்துக் கொண்டார். இவர்களுக்கு அருகிலேயே, கல் தச்சர்களான வல்லனும் மல்லனும், தங்களின் உளிகளுடன் தயாராய் இருந்தார்கள். ஓலை அவர்களிடம் தரப்பட்டது.

எம் மன்னர், இந்த சகோதரர்களிடம் ஏதோ ஒரு தனித் திறமை இருப்பதை உணர்ந்திருந்தார். அவர் கண்கள் அதை வெளிப்படுத்தியது. அத்தனை தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த எனக்கே அது விளங்கியது.

வெட்டப்படும் கல்லையும் மன்னரே தேர்ந்தெடுத்தார். வல்லனும் மல்லனும் அருகருகில் அமர்ந்தார்கள். அவர்கள் மடியில் கல் வைக்கப்பட்டது. அவர்களின் கையில் இருந்த உளி, கல்லிலே விளையாட ஆரம்பித்தது.

வல்லன், இடமிருந்து வலமாக வெட்ட ஆரம்பித்தான். மல்லன், வலமிருந்து இடமாகவும், கீழிருந்து மேலாகவும் வெட்ட ஆரம்பித்தான். மன்னரின் ஆச்சரியத்திற்கு அளவே இல்லை. எத்தனை திறமை இச்சகோதரர்களிடம்!

ஓரிரு நிமிடங்களில், முழு கல்லும், சிறிதும் பிசகாமல் வெட்டப்பட்டது. ஒவ்வொரு எழுத்தும் பேசியது. மாமன்னர் கட்டி அணைத்துக்கொண்டார் அந்த சகோதரர்களை. அந்த கல், அதிரன சண்டேஸ்வரத்தில், ஈசனின் சன்னிதிக்கு முன்னால் பதிக்கப்பட்டது.

நானோ, மன்னருக்கு மிக அருகே இருக்கும், கல் தச்சர் முதற்கொண்டு சந்தேக கண் வைத்து பார்த்துக் கொண்டிருந்தேன். என் பார்வையில், கூட்டத்திலிருந்த இருவரின் பார்வையும், நடவடிக்கையும் சந்தேகமாய் இருந்தது. அவர்களின் முகங்களை மனதில் பதித்துக்கொண்டேன்.

கூட்டம் கலைய ஆரம்பித்தது. மன்னரின் தேர், அடுத்து கடல் மல்லை நோக்கி நகர்ந்தது. மரத்தில் இருந்து குதித்தேன். சோழன் ஒருவன் என்னைக் கவனித்து விட்டான். ஆனால் அவன் என்னைப் போன்றவன். ஒரு சிறு புன்னகையுடன், கடல் மல்லை நோக்கி விரைந்தேன்.

கடல் மல்லை. பறந்து விரிந்த கடல். குன்றுகளே அல்லாத நிலப்பரப்பில், கடல் கோவில் கம்பீரமாய் நின்றது. அங்கு மரங்கள் அதிகம் இல்லை. மாமன்னரை கவனிப்பதற்கு வழியும் இல்லை. எம் மாமன்னர் கடல் கோவில் நோக்கி விரைந்தார். அவரைச் சுற்றி சதுர வடிவத்தில் காலாட்படை வீரர்கள்; ஐந்து பாதுகாப்பு சதுரங்கள் அமைத்து, மாமன்னரை சுற்றியே நடந்தனர். அவரை எவராலும் நெருங்க இயலாது. அந்த படையை கடந்து, கடல் கோவிலின் அருகே கூட்டத்துடன் கலந்து நின்றேன். மன்னர் வந்தடைந்தார்.

ஈசனையும், சயன பெருமாளையும் வணங்கி விட்டு, கடல் கோவிலுக்கு நிவந்தங்கள் வழங்கும் விழா ஆரம்பித்தது. சுற்றுப்புற சுவற்றின் மீதேறி, எம் மாமன்னரை சுற்றி இருக்கும் கூட்டத்தை கவனித்துக் கொண்டிருந்தேன். இங்கும் அதே போல், மாமன்னர் நிவந்தங்கள் வழங்க, ஓலை நாயகம் அதை ஓலையில் குறிக்க, வல்லனும், மல்லனும் கல்லிலே வெட்டினார்கள்.

என் மனம் சலனம் அடைந்தது. சற்று முன் சந்தேகத்திற்கு இடமாய் நான் கண்ட அந்த இருவர், இங்கே என் கண்ணில் படவில்லை. யாராக இருப்பார்கள்? அவர் களின் நோக்கம் என்ன? மன்னருக்கு ஆபத்து நேரிடுமோ? என்ற கேள்விகள் என் மனதில் உதிக்க, உடனே சுவற்றில் இருந்து குதித்து, அருகில் இருக்கும் சிறிய தாமரைக் குளத்திற்குச் சென்றேன். அங்கு நான் கண்ட காட்சி என் மனதை சந்தோஷக் கடலில் ஆழ்த்தியது.

ஒரு புறம் எம் மாமன்னர் நிவந்தங்கள் வழங்கும் விழா கோலாகலமாய் நடந்து கொண்டிருக்கையில், மறுபுறம் அவர் எப்படி இந்த விழாவிற்கு வராமல் இருப்பார்? தன் நண்பருக்கு அருகிலேயே அவர் இல்லாமல் எவ்வாறு போவார்? என்று நெருடிய என் மனதின் கேள்விக்கு குளக்கரையில் எனக்கு பதில் காத்திருந்தது.

குளத்தின் ஒரு ஓரத்தில், எவரும் பாராத வகையில், நான் சந்தேகப்பட்ட அந்த இருவரையும், வல்லத்து மாவீரர் வல்லவரையர் வந்தியத்தேவர், படை வீரர்களுடன் சிறை பிடித்து வைத்திருந்தார்.

ஆஹா!! இவர்களை போன்றவர்கள் சோழ தேசத்தில் இருக்க, ஒரு துரும்பும் சோழ தேசத்தினுள் நுழைய இயலாது. மனம் மகிழ்ந்தேன்.

விழா நிறைவடைந்தது. மன்னர் தன் இருப்பிடம் திரும்பினார். தொடர்ந்து மக்கள் கூட்டமும் கலைந்தது. அத்தனை பெரிய கடல் கோவிலில், நான் மட்டும் அந்த ஈசனுக்கும், பெருமாளுக்கும் துணையாய் நின்றேன். எம் மாமன்னர் வழங்கிய நிவந்தங்கள் வெட்டிய கல்லிற்கு அருகே சென்று அமர்ந்தேன். அவற்றைக் கட்டி அணைத்துக் கொண்டேன்.

அய்யனே! என்ன புண்ணியம் செய்தேன்; உன்னுடன் இந்த சோழ தேசத்தில் பிறக்க! உன் அருகிலேயே என் காலம் முழுவதும் கழிக்க! என் மூத்தோர் செய்த நல்வினையோ, எம் மாமன்னா.. உனதருகே எனக்கோர் இடம் கொடுத்தாய்? எத்தனை கோவில்கள், அதற்காக அளவிட முடியாத நிவந்தங்கள், ஒவ்வொன்றையும் கல்லிலே பொரித்து சோழ தேசத்து மன்னன் இந்த உலகத்திற்கே எடுத்துக்காட்டாய் விளங்கினான் என்று ஆதாரமாய் காட்டுகிறாய். அடுத்து வரும் சந்ததியினர், நற்பண்பு களோடு திகழவேண்டும் என்று இவைகளை கண்டாலே மனதில் பதிந்து விடுமே! இது வெறும் கல் இல்லை! ஓர் மாமனிதரின் மனம்! ஒரு சோழனின் குணம்!! சோழ தேசத்தின் நற்பண்பு!! இதை வெறும் கல் என்று மதிப்பவர்களின் அறியாமையை ஈசனே நீயே நீக்குவாய்!!

எழுந்து நின்றேன். கதிரவன் பூமியின் மறுபக்கம் ஒளி வீசச் செல்லும் நேரம். எம் மாமன்னர் ராஜராஜ சோழரை மனதில் முழுவதுமாய் நிறைத்து, கண்கள் மூடி, கைகள் உயர்த்தி, அவர் வாழ்க என்று போற்றி அங்கிருந்து விடைபெற்றேன்.

நான், பரஞ்சோதி என்கிற அந்தணத்தேவன். ராஜராஜரின் முதன்மை ஒற்றர் படை தளபதி.

- ஷ்யாம்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com