உங்கள் கற்றல் திறனை மாற்றிக் கொள்ள வேண்டுமா?

நீங்கள் நன்றாக படிக்கிறீர்களா? அப்படியிருந்தும் மதிப்பெண்கள் உயரவில்லை என்று வருந்துகிறீர்களா? கவலை வேண்டாம், உங்கள் கற்றல் திறனைப் பற்றி இந்த சுய பரிசோதனையை மேற்கொள்ளுங்கள்.
உங்கள் கற்றல் திறனை மாற்றிக் கொள்ள வேண்டுமா?
Published on

உங்கள் கற்றல்திறன் எப்படி? என்ன மாற்றங்களைச் செய்தால் சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும் என்பதை அறிந்துகொள்ளலாம்.

சுய பரிசோதனைக்குச் செல்வோமா?...

1. முகபாவனை மற்றும் உடல்மொழியின் மூலம் ஒருவரை எளிதாக என்னால் எடைபோட முடியும்

அ. ஆம், எடைபோட்டுவிடுவேன்

ஆ. கொஞ்சம் கணித்துவிடுவேன்

இ. இல்லை, மற்றவர்களை புரிந்து கொள்ள முடியவில்லை

2. நீண்ட நேரம் பாடம் நடத்தும் ஆசிரியரை பிடிக்குமா?

அ. ஆம். அவர்கள் நன்றாக விளக்கம் அளிப்பார்கள்.

ஆ. ஓரளவு பிடிக்கும்.

இ. சொற்பொழிவை எப்போது முடிப்பார் என யோசிப்பேன்.

3. மொழிப்பாடங்களில் ஆர்வம் உண்டா?

அ. ஆம், தாய்மொழி, தேசிய மொழி, உலகத் தொடர்பு மொழிகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் உண்டு.

ஆ. எல்லா பாடங்களைப் போல படிக்கிறேன்.

இ. வேறுமொழிகள் குழப்பம் தரும்.

4. அறிவியலும், கணிதமும் உங்களுக்குப் பிடிக்குமா?

அ. ஆம், எனது விருப்பப்பாடங்களே அவைதான்.

ஆ. கொஞ்சம் பிடிக்கும். சராசரியாக படிப்பேன்.

இ. இந்த இரண்டும் எனக்கு வராது. அதனால் நான் வேறு பாடப்பிரிவை தேர்வு செய்து படிக்கிறேன்.

5. படிப்பதைவிட, கேட்பதன் மூலமே நன்றாக பாடங்களை புரிந்து கொள்கிறீர்களா?

அ. ஆம், ஆசிரியர் அல்லது மற்றவர்கள் அளிக்கும் விளக்கம் பாடங்களை எளிதாக விளங்கிக் கொள்ள உதவுகிறது.

ஆ. பாடம் நடத்தும்போது பாதி புரியும், படித்துப் பார்த்து மீதி புரிந்துகொள்கிறேன்.

இ. பாடங்கள் புரிய சிரமமாக இருக்கிறது.

6. படிப்பில் விருப்பம் எப்படி, உங்கள் விருப்ப பாடப்பிரிவில்தான் படிக்கிறீர்களா?

அ. ஆம் விரும்பியதை படிக்கிறேன். படித்து லட்சியத்தை எட்டுவேன்.

ஆ. பெற்றோர் விருப்பப்படி படிக்க முயற்சிக்கிறேன்.

இ. ஏதோ படிக்கிறேன்.

7. ஒரு புதிய வார்த்தையை பார்த்ததும் நானாக உச்சரித்துப் பழகுவேன், அதை மற்றவர்முன் கூச்சமின்றி சொல்ல முடியும்?

அ. புதிய வார்த்தைகளைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புவேன்.

ஆ. படித்துப் பார்ப்பேன், ஆனால் தெரிந்த வார்த்தைகளையே பயன்படுத்துவேன்.

இ. தெரியாத வார்த்தைகளை புறக்கணிப்பேன்.

8. ஒரு விஷயத்தைப் பற்றி கூடுதல் விவரங்களை தேடி அறிவீர்களா?

அ. ஆம், நான் தேவையான விவரங்களை தேடித் தேடி அறிந்து கொள்வேன்.

ஆ. புத்தகங்களில் உள்ளதை மட்டுமே படிக்கிறேன்.

இ. படிப்பதே சிரமமாக உள்ளது.

9. வரைபடங்கள், ஓவியங்கள் நன்றாக வரைய முடியுமா?

அ. ஆம். நன்றாக வரைவேன், நண்பர்களே என்னிடம் வரைய கேட்பார்கள்.

ஆ. ம்.. வரைவேன்.

இ. சிரமப்படுவேன்

10. புத்தகத்தில் இருக்கும் அனைத்து பாடங்களையும் படித்து விடுவீர்களா?

அ. ஆம், எல்லா பாடங்களையும் படிப்பேன். எதையும் ஒதுக்கமாட்டேன்.

ஆ. முக்கியமான, புரிந்த பாடங்களை மட்டுமே படிப்பேன்.

இ. தேர்ச்சி பெற போதுமான பாடங்களை படிக்க வலியுறுத்துகிறார்கள்.

11. படிக்கும்போது சத்தம் போட்டு படிக்கிறீர்களா?

அ. சிறுவயதில் அப்படி படித்தேன். இப்போது அப்படியில்லை.

ஆ. மனதில் பதிய மறுபடி மறுபடி வாசிப்பேன்.

இ. சத்தம்போட்டு படிக்க மாட்டேன்.

12. ஆசிரியரைப்போல உங்களால் பாடங்களுக்கு விளக்கம் அளிக்க முடியுமா?

அ. ஆம், விளங்கிய பாடங்களை விளக்கிச் சொல்வேன்.

ஆ. படித்துவிடுவேன், விளக்கிச் சொல்ல தயக்கம்.

இ. என்னால் அது முடியாது.

13. தேர்வின்போது விடைகள் என் மனக்கண்ணில் ஓடும், கைகள் எழுதும்...

அ. ஆம், தேர்வின்போது விடைகள் அப்படித்தான் என் மனக்கண்ணில் ஓடுகிறது.

ஆ. யோசித்து எழுதுவேன்.

இ. தேர்வென்றாலே பயம்.

14. நீங்கள் எழுதிக் காட்டுவதைவிட, வாய்மூலமாக பதில் சொன்னால் சிறப்பாக பதிலளிக்க முடியும் என நினைக்கிறீர்களா?

அ. என்னால் எழுதவும் முடியும், விளக்கம் அளிக்கவும் முடியும்.

ஆ. எழுத்துத் தேர்வுதான் எனக்கு பிடித்தது.

இ. இரண்டுமே தடுமாற்றம் தரும்.

15. வார்த்தைப் புதிர் விளையாட்டுகளில் ஆர்வம் உண்டா?

அ. ஆம், பத்திரிகைகளில் அதைக் கண்டால் விடமாட்டேன். விடை கண்டுபிடித்தே தீருவேன்.

ஆ. கொஞ்சம் ஆர்வம் உண்டு.

இ. ஆர்வம் இல்லை.

16. ஆய்வக பயிற்சிகள் பிடிக்கிறதா?

அ. ஆம், பிடிக்கிறது, அது என் சிந்தனையை தூண்டுகிறது.

ஆ. அது கட்டாய பயிற்சி என்பதால் ஆய்வகம் செல்வேன்.

இ. விருப்பமில்லை, நான் ஆய்வகம் சென்றதில்லை.

17. கதை சொல்வதில் வல்லவரா நீங்கள்?

அ. ஆம்... கதைகளை ரசிப்பேன், சொல்வேன்.

ஆ. கதைகள் பிடிக்கும்.

இ. கதை சொல்ல தெரியாது.

18. ஒரு பொருளைப் பார்த்ததும் அதைப் பற்றிய அடிப்படைகளை என்னால் அறிந்து கொள்ள முடிகிறது. அதை செயல்படுத்தும் முறை, பிரித்து பொருத்தும் முறையை விளங்கிக் கொள்ள முடிகிறது?


அ. ஆம். புரிந்து கொள்கிறேன், அதற்கான ஆர்வம் என்னிடம் உள்ளது.

ஆ. நன்கு பயன்படுத்துவேன், ஓரளவு புரிந்து கொள்வேன்

இ. பயன்படுத்துவேன், மற்றவற்றை யோசிப்பதில்லை.

19. ஒரு தகவலை நினைவுபடுத்துவதற்காக பாடலாக மாற்றியோ அல்லது வேறு எதையும் தொடர்புபடுத்தியோ படிக்கிறீர்களா?


அ. ஆம். ஆசிரியர் கற்றுத்தந்த அந்த உத்தி நன்று பயன்படுகிறது.

ஆ. மீண்டும் மீண்டும் படித்து மனதில் ஏற்றிக்கொள்வேன்.

இ. படித்ததெல்லாம் சிறிது காலத்தில் மறந்துவிடுகிறது.

20. வகுப்பறை விவாதங்கள், பள்ளி விழா நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பீர்களா?

அ. ஆம், எல்லா நிகழ்ச்சிகளிலும் என் பங்களிப்பு இருக்கும்.

ஆ. விவாதிக்க மாட்டேன், என் திறமையை காட்ட நினைப்பேன்.

இ. விவாதம் பிடிக்காது. நிகழ்ச்சிகளை ரசிப்பேன்.

இப்போது விடைகளுக்கு வருவோம். ஒவ்வொரு கேள்வியின் முதல் (அ) பதிலுக்கு 10 மதிப்பெண் வழங்குங்கள். இரண்டாவது (ஆ) பதிலுக்கு 5 மதிப்பெண் வழங்குங்கள். 3-வது (இ) பதிலுக்கு 2 மதிப்பெண்கள் வழங்குங்கள். இப்போது அனைத்து வினாக்களுக்கும் விடையளித்து உங்கள் மதிப்பெண்களை கூட்டுங்கள். அந்த கூட்டுத் தொகை எவ்வளவு என்பதற்கேற்ப உங்களைப் பற்றிய மதிப்பீடுகள் இதோ...

உங்கள் மதிப்பெண் 60-க்குள் இருந்தால்....

நீங்கள் பல்வேறு திறமைகளை வளர்க்க வேண்டியவர். படிப்பில் நீங்கள் ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும். கல்வியே உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதை நீங்கள் உணர வேண்டும். புத்தகப் படிப்பால் இல்லாவிட்டால் அனுபவக் கல்வி மூலமாவது படிப்பினைகளை உணர்ந்து கொண்டு உச்சம் தொட முயற்சிக்க வேண்டும். அதற்கும் சாதுர்யம் அவசியமாகும். அதற்காக அலட்சியப் போக்கை கைவிட்டு, படிக்கும் முயற்சியை தீவிரமாக்குங்கள். விருப்பமான பாடங்களை தேர்வுசெய்து படியுங்கள். பாடங்கள் கடினமாக இருந்தால் செயற்முறை பயிற்சிகள் அடங்கிய தொழிற்பயிற்சி கல்வியை படித்து முன்னேறலாம். அறிவியல், கணிதம் கடினமாகத் தெரிந்தால், தொடர்புக்கு அவசியமான மொழிப் பாடங்களில் கவனம் செலுத்தலாம். வரலாறு, கலைப் படிப்புகளில் ஆர்வம் காட்டலாம்.

உங்கள் மதிப்பெண் 60-க்கு மேல் 130-க்குள் இருந்தால்...

சராசரி மாணவர் நீங்கள். விரும்பிய பாடத்தை தேர்வு செய்து படித்தால் நீங்கள் முன்னோடி மாணவராக மாறும் திறன் கொண்டவர்கள். கூர்ந்து கவனிக்கும் திறன், புதியவைகளை தேடி அறிந்து கொள்ளும் ஆர்வம், தகவல் தொடர்புத்திறன் ஆகியவற்றை வளர்த்துக் கொண்டால் நீங்கள் சிறந்த மாணவராக மாறிவிடுவீர்கள். இந்த பண்புகள் மாணவர் பருவத்தில் மட்டுமல்லாது, எதிர்கால வாழ்க்கைக்கும் மிக அவசியம் என்பதால் அவற்றை வளர்த்துக் கொள்வது பிரகாசமான எதிர்காலத்திற்கு துணை புரியும்.

உங்கள் மதிப்பெண் 130-க்கு மேல், 200 வரை இருந்தால்...

சிறந்த மாணவர் நீங்கள். ஆசிரியரின் பாடம் நடத்தும் முறையை கூர்ந்து கவனித்தல், புரிந்து கொள்ளுதல், தேவையான விஷயங்களை தேடிப் படித்தல், படிக்க வேண்டியதை மிச்சம் வைக்காமல் படித்தல், தெரிந்ததை விளக்கிச் சொல்லுதல், மற்றவர்களை புரிந்து கொள்ளுதல் என எல்லா திறமைகளும் உங்களிடம் உள்ளது. இந்த பண்புகள் உயர்ந்த இலக்குகளை அடைய உதவியாக இருக்கும். அனைவருடனும் இணக்கமாக பழகுதல், எதிர்ப்புகளை சமாளித்தல், பின்னடைவுகளின்போது உறுதியுடன் செயல்படுதல் போன்ற பண்புகளையும் வளர்த்துக் கொண்டால் யாராலும் வீழ்த்த முடியாத வெற்றி மனிதராக நீங்கள் வலம் வரப்போவது நிச்சயம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com