நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய பாஜக அரசு முன்வர வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

நடப்பாண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்து விட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய பாஜக அரசு முன்வர வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
Published on

சென்னை,

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2024-ம் ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வில் எந்த வகையிலும் சாத்தியமற்ற வகையில் சில மாணவர்களுக்கு மட்டும் மதிப்பெண்கள் வாரி இறைக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு எதற்காக உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கங்களை நிறைவேற்றவில்லை என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய குற்றச்சாட்டு யாருக்கும் பயனளிக்காத நீட் நுழைவுத்தேர்வை உடனே ரத்து செய்ய வேண்டும் என்ற வாதங்களுக்கு வலிமை சேர்த்திருக்கிறது.

நாடு முழுவதும் கடந்த மே 5-ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வுக்கான முடிவுகள் வரும் 14-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பத்து நாட்கள் முன்பாக கடந்த 4-ம் தேதியே தேசிய தேர்வு முகமையால் வெளியிடப்பட்டது. மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட நீட் தேர்வில் நாடு முழுவதும் 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.

அரியானா மாநிலத்தில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் 720-க்கு 720 மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த காலங்களில் அதிக அளவாக 2021-ம் ஆண்டில் மூவரும், 2020-ம் ஆண்டில் இருவரும், 2023-ம் ஆண்டில் ஒருவரும் முழு மதிப்பெண்களை பெற்றிருந்தனர். ஆனால், இம்முறை 67 பேர், அதிலும் ஒரு கேள்விக்கு தவறான விடையளித்து மைனஸ் மதிப்பெண் பெற்ற 44 பேரும் 720 மதிப்பெண் பெற்று முதலிடத்தை பிடித்திருப்பது வியப்பையும் நீட் மீது நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தியுள்ளன.

நீட் தேர்வில் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு நேர இழப்பு ஏற்பட்டது உண்மை தான். ஆனால், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நேர இழப்புக்கான கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக தெரியவில்லை. தேர்வு முகமைக்கு மனு அனுப்பியவர்களுக்கும், நீதிமன்றத்தை அணுகியவர்களுக்கும் மட்டுமே கருணை மதிப்பெண் வழங்குவது நியாயமும் அல்ல, சமூகநீதியும் அல்ல. தேர்வு முகமை பின்பற்றிய இந்த பிழையான நடைமுறையால் பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பாதிக்கப்படுவார்கள்.

2024-ம் ஆண்டில் நீட் தேர்வு நடத்தப்பட்ட விதம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. தேர்வுக்கு முன்பே வினாத்தாள் வெளியானதாகவும், சில மையங்களில் தவறான வினாத்தாள்கள் வழங்கப்பட்டதாகவும் ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்திருந்த நிலையில், கருணை மதிப்பெண்கள் வழங்குவதில் நடந்த குளறுபடிகள் மருத்துவப் படிப்பில் சேர நினைத்திருந்த மாணவர்களின் நம்பிக்கையை குலைத்திருக்கின்றன. அந்த மாணவர்களின் ஐயங்கள் அனைத்தையும் மத்திய அரசு போக்க வேண்டும்.

மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்கவும், மருத்துவக் கல்வி வணிகமயமாவதை தடுக்கவும்தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், இந்த இரு நோக்கங்களையும் நீட் நிறைவேற்றவில்லை. அவற்றையும் கடந்து, கருணை மதிப்பெண்கள் வழங்குவதில் நடந்த குளறுபடிகள், மாணவர்களிடையே பாகுபாட்டைக் காட்டி, பலரின் வாய்ப்புகளை பறித்திருக்கிறது. இந்த அநீதியைப் போக்க நடப்பாண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்து விட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும். அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com