

சென்னை,
தமிழக தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கியதை அடுத்து அ.தி.மு.க., மற்றும் தி.மு.க. கட்சி தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டவர்கள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாளை (வெள்ளிக்கிழமை) தமிழகம் வருகிறார். அவர் காலை 11 மணிக்கு திட்டக்குடி தொகுதியிலும், மாலை 3.30 மணிக்கு திருவையாறு தொகுதியிலும், இரவு 7.30 மணிக்கு துறைமுகம் தொகுதியிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று பா.ஜ.க. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
வருகிற 27-ந் தேதி (சனிக்கிழமை) மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி, கோவை தெற்கு, துறைமுகம், ஆயிரம்விளக்கு ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார். வருகிற 30-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரியிலும், தமிழகத்தில் உள்ள தாராபுரம் தொகுதியிலும் பிரசாரம் செய்கிறார்.
யோகி ஆதித்யநாத்
உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், கோவை தெற்கு, விருதுநகர் ஆகிய சட்டசபை தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஊட்டி மற்றும் தளி தொகுதிகளிலும், வருகிற 1-ந் தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியிலும் பிரசாரம் செய்கின்றனர். தொடர்ந்து 2-ந் தேதி மதுரையில் நடக்கும் கூட்டணி கட்சி பொதுக்கூட்டத்திலும், நாகர்கோவிலிலும் அவர் பிரசாரம் செய்கிறார்.
வருகிற 3-ந் தேதி அமித்ஷா, ராமநாதபுரம், நெல்லை மற்றும் ஆயிரம்விளக்கு தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார். மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஏப்ரல் 1-ந் தேதி திருக்கோவிலூர், கோவை தெற்கு தொகுதிகளிலும், 3-ந் தேதி குளச்சல் மற்றும் விருதுநகரிலும் பிரசாரம் செய்கிறார். அதேபோல் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மொடக்குறிச்சி, காரைக்குடி, விளவங்கோடு சட்டசபை தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
மேற்கண்ட தகவல்களை பா.ஜ.க. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.