

ஆலந்தூர்,
இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவல் காரணமாக பன்னாட்டு பயணிகள் விமான சேவை நிறுத்தப்பட்டது. மத்திய அரசின் அனுமதியின்பேரில் சிறப்பு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டன.
ஆனால் மலேசியா, சிங்கப்பூரில் இருந்து நேரடியாக பயணிகள் விமான சேவை தொடங்கப்படவில்லை. இதனால் இந்த நாடுகளில் உள்ள தமிழர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.
எனவே புலம் பெயர்ந்த தமிழர்கள் வந்து செல்ல மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு நேரடி விமான சேவை ஏற்படுத்தி தரவேண்டும் என்று மத்திய மந்திரிக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 25-ந் தேதி கடிதம் எழுதினார்.
நேரடி விமான சேவை
இதையடுத்து 20 மாதங்களுக்கு பிறகு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் சிங்கப்பூரில் இருந்து சென்னை, டெல்லி, மும்பைக்கு தினசரி நேரடி விமான சேவையை நேற்று முதல் தொடங்கியது. அதன்படி சிங்கப்பூரில் இருந்து நேற்று இரவு 10 மணிக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்தது. மீண்டும் அந்த விமானம் சென்னையில் இருந்து இரவு 11.15 மணிக்கு சிங்கப்பூர் புறப்பட்டு சென்றது.
முன்னதாக மாலை 3 மணிக்கு சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்ற இண்டிகோ விமானம் நள்ளிரவு 12.30 மணிக்கு சென்னை திரும்பி வந்தது. ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் இரவு 10 மணிக்கு சென்னையில் இருந்து சிங்கப்பூர் சென்றது. அந்த விமானம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7.30 மணிக்கு சென்னைக்கு திரும்பி வரும்.
தடுப்பூசி
சிங்கப்பூர் செல்லும் பயணிகள் 2 தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். 48 மணி நேரத்துக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்ற சான்றுடன் வரவேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட்டதால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு செல்ல இணைப்பு விமானமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.