

திருப்பூர்,
திருப்பூர் வடக்கு ஒன்றியம் காட்டுப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 10 மாணவ-மாணவிகள் மட்டுமே படித்து வருகிறார்கள். இங்கு தலைமை ஆசிரியராக ஜான் ஜெரால்டு கென்னடி (வயது 54) என்பவரும், மற்றொரு ஆசிரியையும் பணியாற்றி வந்தனர்.
பெற்றோர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தலைமை ஆசிரியர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிவந்தனர். அதைத் தொடர்ந்து அந்த பள்ளிக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்த மாவட்ட தொடக்க க்கல்வி அதிகாரி கனகமணி அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி கனகமணி கூறியதாவது:-
காட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் ஜெரால்டு கென்னடி மீது பல்வேறு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து உதவி தொடக்கக்கல்வி அதிகாரி நடத்திய விசாரணையில், அவர் பள்ளி நேரத்தில் அடிக்கடி வெளியே சென்று புகைப்பிடிப்பதையும், மது குடித்துவிட்டு வந்து தலைமை ஆசிரியர் அறையில் படுத்துக்கொள்வதையும் வழக்கமாக கொண்டிந்தார்.
இதையடுத்து அந்த பள்ளிக்கு நான் ஆய்வுக்கு சென்றபோது, அவர் எழுந்து நிற்கமுடியாத அளவுக்கு மது போதையில் இருந்தார். நான் கேட்ட எந்த கேள்விக்கும் அவரால் விளக்கம் அளிக்க முடியவில்லை. இதனால் மது போதையுடன் பணிக்கு வந்த அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.