

கோவை,
தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், தமிழகத்தின் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தற்போது விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் நின்று ஆர்வத்துடன் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். மேலும் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் அதிகாலையிலேயே வாக்குச் சாவடிக்கு வந்து வாக்குகளை செலுத்தினர்.
அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வருகை தந்தார். அவருடன் அவரது மகள்கள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷராஹாசனும் உடன் வந்து, வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தினர். இதை தொடர்ந்து அவர் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதிக்குச் சென்று வாக்குப்பதிவு நடைமுறைகளை பார்வையிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொகுதியில் பல இடங்களில் பணப்பட்டுவாடா நடப்பதாக குற்றம்சாட்டினார். சில கட்சியினர் மக்களிடம் டோக்கன்களை வழங்கி பணத்தை விநியோகம் செய்ததாகவும் அவர் கூறினார். தோல்வி பயத்தில் இதுபோன்ற ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் சிலர் ஈடுபடுவது வருத்ததிற்குரிய செயல் என்று அவர் குறிப்பிட்டார்.