வயது மூப்பு காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கம் சாவு - 6 மாதத்தில் 7 விலங்குகள் உயிரிழப்பு

வயது மூப்பு காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் 32 வயதுடைய ஆண் சிங்கம் உடல்நலக்குறைவால் இறந்தது.
வயது மூப்பு காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கம் சாவு - 6 மாதத்தில் 7 விலங்குகள் உயிரிழப்பு
Published on

சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,300 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2000-ம் ஆண்டு கள்ளக்குறிச்சி சிறு பூங்காவிலிருந்து 10 வயதில் மீட்கப்பட்ட மணி என்ற ஆண் சிங்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா வளாகம் எதிரே உள்ள விலங்குகள் மீட்பு மற்றும் புனர்வாழ்வு மையத்தில் வைத்து பூங்கா ஊழியர்களால் பராமரிக்கப்பட்டு வந்தது.

தற்போது 32 வயதான இந்த ஆண் சிங்கம், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. பூங்கா டாக்டர்கள் உயிரிழந்த சிங்கத்தின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனை செய்த பிறகு அடக்கம் செய்தனர்.

பூங்காவில் கடந்த 6 மாத காலத்தில் வெவ்வேறு காரணங்களால் 7 விலங்குகள் உயிரிழந்துள்ளது. 2022-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 18 வயது சிறுத்தையும், மார்ச் மாதம் அகன்ஷா என்ற 13 வயது வெள்ளைப்புலியும், மே மாதம் 18 வயது டீனா என்ற வரிக்குதிரையும் உடல்நலக்குறைவால் உயிரிழந்தன.

இதே மாதத்தில் பிறந்த சில நாட்கள் ஆன காட்டுக்கழுதை குட்டியும் உயிரிழந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சாம்பார் மான், காட்டு மாடு, காட்டுப்பன்றி ஆகிய விலங்குகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

2021-ம் ஆண்டு கொரோனா உச்சமடைந்த காலக்கட்டத்தில் சிங்கம், புலி, நெருப்புக்கோழிகள், வெள்ளைப்புலி ஆகியவை உயிரிழந்துள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு விலங்குகள் உடல்நலக்குறைவு மற்றும் நோய் தொற்று காரணமாக உயிரிழந்து வருவது பொதுமக்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் இடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com