

சென்னை,
மதிப்பு கூட்டு வரி சட்டப்பிரிவு 31-ன் கீழ் பெட்ரோல், டீசலுக்கான வரியை உயர்த்தி கடந்த மே மாதம் 27-ந்தேதி புதுச்சேரி மாநில அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்திற்கு பெட்ரோலுக்கு 28 சதவீதம், டீசலுக்கு 21.80 சதவீதம் வரி உயர்த்தப்பட்டது.
மாகே பகுதியில் பெட்ரோலுக்கு 23.90 சதவீதமும், டீசலுக்கு 18.15 சதவீதமும், ஏனாம் பகுதியில் பெட்ரோலுக்கு 25.70 சதவீதமும், டீசலுக்கு 20 சதவீதமும் வரி உயர்த்தப்பட்டது. இந்த வரி உயர்வை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் புதுச்சேரி பா.ம.க. நிர்வாகி தேவமணி வழக்கு தொடர்ந்தார்.
அதில், கொரோனா ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களை நம்பியே உள்ள நிலையில் பெட்ரோல், டீசலுக்கு அவசர கதியில் வரியை அரசு உயர்த்தியது தவறானது. எனவே இந்த வரி உயர்வு அரசாணைக்கு தடை விதிப்பதுடன், ரத்தும் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், பெட்ரோல், டீசலுக்கு வரியை உயர்த்தியது செல்லாது என்று கூறியும், புதுச்சேரி மாநில அரசின் அரசாணையை ரத்து செய்தும் உத்தரவிட்டார்.