

குடிசை வீட்டில் தீ விபத்து
திருத்தணி அடுத்த சிவாடா காலனியை சேர்ந்தவர் பழனி (வயது 45). ஆட்டோ டிரைவர். இவருக்கு காளியம்மா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் குடிசை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென குடிசை வீடு தீப்பற்றி எறிந்தது.
இதனை பார்த்த அந்த பகுதிமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த சமயம் பொதுமக்கள் சிலர் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். அப்போது திடீரென வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.
இதில் அந்த பகுதியை சேர்ந்த ஏசு ரத்தினத்தின் மகன் தனுஷ் (வயது 20) என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
போலீசார் விசாரணை
பின்னர் அரக்கோணம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் குடிசை வீடு தரைமட்டமானது. வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். விபத்து நடந்த இடத்திற்கு வருவாய்துறையினர் மற்றும் போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதில் வீட்டில் வைத்திருந்த ரூ.1 லட்சம், டி.வி, பீரோ, கட்டில், மற்றும் முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து நாசமாகின. தீ விபத்து சம்பவம் தொடர்பாக கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் இருந்த கியாஸ் சிலின்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பற்றிக் கொண்டதா? அல்லது மின்கசிவு காரணமாக குடிசை வீட்டில் தீ பரவியதா? என்ற கோணத்தில் விசாரனை நடத்தி வருகின்றனர்.