விஷ சாராய மரணங்கள் தொடர்பான வழக்கில் விசாரணை வேகமாக நடைபெற்று வருகிறது - அமைச்சர் ரகுபதி

எடப்பாடி பழனிசாமி விஷ சாராய மரணங்களை வைத்து அரசியல் செய்து வருகிறார் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் விஷ சாராய மரணங்கள் நிகழ்ந்தவுடன் பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக நிவாரணம் கிடைக்கவும் நீதி கிடைக்கவும் உத்தரவிட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். அதனடிப்படையில் சிபிசிஐடி போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது; குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு அக்குழுவும் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க தமிழ்நாடு அரசால் சட்டத்திருத்த மசோதாவும் உடனடியாக கொண்டுவரப்பட்டது. காவல்துறையால் இடைக்கால அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றத்தோடு தொடர்புடைய 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 17 பேர் குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை வேகமாக நடைபெற்று இறுதி குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் சிபிஐ விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவு வழங்கியிருப்பது வழக்கின் வேகத்தை தாமதப்படுத்தும். சிபிஐ விசாரணையால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைப்பது மேலும் தாமதமாகும். அதற்கு பல சான்றுகள் உண்டு; பாதிக்கப்பட்டோருக்கு விரைவாக நீதி கிடைக்கவே ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது.

பாதிக்கப்பட்டோருக்கு விரைவாக நீதி கிடைப்பதில் அக்கறை இல்லாத பழனிசாமி விஷ சாராய மரணங்களை வைத்து அருவருக்கத்தக்க அரசியல் செய்து வருகிறார். தன் மீதான ஊழல் குற்றச்சாட்டிற்கு பயந்துபோய் சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ விசாரணை வேண்டாம் என தடை உத்தரவு வாங்கிய பழனிசாமி இன்று சிபிஐ விசாரணை கோருவது கேலிக்கூத்தாக இருக்கிறது. அரசின் மேல்முறையீட்டு முடிவை எதிர்த்து மலிவு அரசியல் செய்யும் பழனிசாமிக்கு வன்மையான கண்டனம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com