வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு இன்று முதல் தடை

வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி இன்றுடன் நிறைவடைகிறது.
வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு இன்று முதல் தடை
Published on

கோவை,

கோவை மாவட்டம் பூண்டி அருகே கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3 ஆயிரம் அடி உயரத்தில் 7 மலைத்தொடர்களை உள்ளடக்கிய வெள்ளியங்கிரி மலை உள்ளது. தென் கைலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையில் சுயம்பு வடிவில் வெள்ளியங்கிரி ஆண்டவர் அருள்பாலித்து வருகிறார்.

ஆண்டுதோறும் கோடைகால தொடக்கத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவையைஅடுத்த பூண்டி வெள்ளியங்கிரி மலைக்கு வருகிறார்கள். அவர்கள், வெள்ளை விநாயகர் கோவில், பாம்பாட்டி சுனை, அர்ஜுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை உள்ளிட்ட மலைகளை கடந்து 7-வது மலை உச்சியில் இருக்கும் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு, கடந்த பிப்ரவரி மாதம் 12-ந் தேதி முதல் வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்தது. வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு நாட்களில் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் 7 மலையேறி சாமி தரிசனம் செய்தனர். குறிப்பாக சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி நாட்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.

கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்ததால் பக்தர்கள் மலை ஏறுவதை தவிர்த்து வந்தனர். அதன்பிறகு வழக்கம் போல் பக்தர்கள் மலையேறினர். இந்த ஆண்டு தற்போது வரை சுமார் 2.5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேறி சாமி தரிசனம் செய்து உள்ளனர். கோடை காலம் முடிந்து இன்னும் ஒரு சில நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. மேலும் 5, 6, 7-வது மலைகளில் அதிகமான மழைப்பொழிவு இருக்கும். கடும் குளிர் நிலவும்.

எனவே பக்தர்களின் நலன் கருதி பூண்டி வெள்ளியங்கிரி மலையேற இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பக்தர்களுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டு உள்ளது. மழை காரணமாக பாதைகள் சேதம் அடைந்துள்ளதால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com