ஆசிரியர்கள் நினைத்தால் நல்ல மாணவர்களை உருவாக்க முடியும்: துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு

ராமநாதபுரம் அரசு பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழாவில் ஆசிரியர்கள் நினைத்தால் நல்ல மாணவர்களை உருவாக்க முடியும் என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.
துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் விலையில்லா சைக்கிள் வழங்கிய போது எடுத்த படம்.
துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் விலையில்லா சைக்கிள் வழங்கிய போது எடுத்த படம்.
Published on

விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

பொள்ளாச்சி அருகே உள்ள மண்ணூர் ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு பொள்ளாச்சி சப்-கலெக்டர் வைத்திநாதன் தலைமை தாங்கினார். விழாவில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசுப் பள்ளிகளில் தற்போது மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எதிர்காலத்தில் அரசுப் பள்ளிக்கு மாணவ-மாணவிகள் வரமாட்டார்கள் என்ற நிலை ஏற்பட்டு விடும். இதற்கான காரணத்தை கண்டறிந்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழக பட்ஜெட்டில் பள்ளி கல்விக்கு மட்டும் ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர விலையில்லா சைக்கிள், மடிக்கணினி,நோட்டு, புத்தகம், சீருடை உள்பட 14 வகையான கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.

ஆசிரியர்கள் சமுதாய சிற்பிகள்

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் கல்விக்காக அதிகம் செலவிடப்படுகின்றன. இத்தனை சலுகைகள் கொடுத்தும் அரசுப் பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கூலித்தொழிலாளர்களும் தங்களது குழந்தைகளை கட்டணம் செலுத்தி தனியார் பள்ளியில் சேர்க்கின்றனர். அரசுப்பள்ளிகள் மீது நம்பிக்கை குறைய காரணம் என்ன?. ஆசிரியர்கள், மாணவர்கள் என இரு தரப்பிலும் தவறுகள் உள்ளன. அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தால் ஆசிரியர்களை வேறு பள்ளிகள், வேறு மாவட்டங்களுக்கு இடம் மாறுதல் ஆகும் நிலை ஏற்பட்டுவிடும். இதை ஆசிரியர்கள் சிந்திக்க வேண்டும். ஆசிரியர்கள் சமுதாய சிற்பிகள். நீங்கள் நினைத்தால் நல்ல மாணவர்களை உருவாக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

167 மாணவ-மாணவிகளுக்கு...

இதில் மொத்தம் ராமநாதபுரம் அரசு பள்ளி மற்றும் புரவிபாளையம் அரசு பள்ளியில் படிக்கும் 167 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது. விழாவில் பொள்ளாச்சி மேற்குஅ.தி.மு.க. செயலாளர் ஆர்.ஏ.சக்திவேல், மாவட்ட கல்வி அதிகாரி சுப்பிரமணியம், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியக் குழு தலை வர் விஜயராணி, பள்ளி தலைமை ஆசிரியர்கள் அருணாதேவி, ஈஸ்வரன், ராமபட்டிணம் ஊராட்சி தலைவர் பொன்னுசாமி, தாசில்தார் தணிகைவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com