வாணாபுரம்,
வாணாபுரம் அருகே உள்ள தென்கரும்பலூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்கள் கணக்கு தொடங்கி வைப்புத்தொகை வைத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நிதி வழங்கியது மற்றும் விவசாயிகளுக்கு நகைக்கடன், பயிர் கடன் வழங்கியதில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றது என்றும் இதற்காக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
கடந்த சில தினங்களாக அதிகாரிகள் வங்கிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. இதனையடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீதும், அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் பல கோடி ரூபாய் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினர். தகவல் அறிந்த வாணாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அங்கு 1 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.