அமெரிக்காவில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் பயங்கர தீ விபத்து; 8 மாத குழந்தை உள்பட 5 பேர் பலி

அமெரிக்காவில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 8 மாத குழந்தை உள்பட 5 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர்.
Published on

வாஷிங்டன்,

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் பட்சத்தில் அவர்கள் தங்கள் குழந்தைகளை பகல்நேர பராமரிப்பு மையத்தில் விட்டுவிட்டு, வேலைக்கு செல்வது வழக்கம்.

அதே போல் இரவு நேர பணிக்கு செல்லும் பெற்றோர்களும் தங்களின் குழந்தைகளை பராமரிப்பு மையத்தில் தங்க வைத்துவிட்டு, மறுநாள் காலையில் வீட்டுக்கு அழைத்து செல்வார்கள்.

இதற்காக அமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பராமரிப்பு மையங்கள் அனைத்தும் உள்ளூர் நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறவேண்டியது கட்டாயம் ஆகும்.

அந்த வகையில் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள எர்ரீ நகரை சேர்ந்த பெண் ஒருவர் உள்ளூர் நிர்வாகத்தின் அனுமதியோடு தனது வீட்டின் ஒரு பகுதியில் சிறிய அளவில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தை நடத்தி வந்தார்.

3 மாடிகளை கொண்ட வீட்டின் 2-வது தளத்தில் இந்த குழந்தைகள் பராமரிப்பு மையம் இயங்கி வந்தது. இரவு பணிக்கு செல்லும் பெற்றோர் சிலர் கடந்த சனிக்கிழமை இரவு தங்களின் குழந்தைகளை இங்கு விட்டுவிட்டு சென்றனர்.

ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 8 சிறுவர்கள் இருந்தனர். வீட்டின் உரிமையாளரான அந்த பெண், சிறுவர்கள் அனைவரையும் தூங்கவைத்து விட்டு, தனது 8 மாத குழந்தையுடன் தூங்கி கொண்டிருந்தார்.

நேற்று முன்தினம் அதிகாலையில் பராமரிப்பு மையம் இயங்கி வந்த வீட்டில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, வீடு முழுவதும் பரவியது.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சிறுவர்கள் வீட்டில் தீப்பிடித்து எரிவதை உணர்ந்து திடுக்கிட்டு எழுந்தனர். இதனால் அவர்கள் பயத்தில் அலறி துடித்தனர்.

இதையடுத்து, வீட்டின் உரிமையாளர் தனது குழந்தை மற்றும் சிறுவர்களை தீயில் இருந்து காப்பாற்ற முற்பட்டார். ஆனால் அதற்குள் வீடு முழுவதையும் தீ சூழ்ந்துகொண்டதால் அவர்கள் அனைவரும் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

எனினும் சிறுவர்கள் 4 பேர் 2-வது தளத்தில் இருந்து ஜன்னல் வழியாக கீழே குதித்து உயிர் தப்பினர். இதற்கிடையில் தீ விபத்து குறித்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் தீயின் கோரப்பிடியில் சிக்கி வீட்டு உரிமையாளரின் 8 மாத குழந்தை மற்றும் பராமரிப்பு மையத்தில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 சிறுவர்களும் தீயில் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர்.

வீட்டின் உரிமையாளர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டார். உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அதேபோல் ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பிய 4 சிறுவர்களும் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com