மருத்துவ மேல்படிப்பில் சேர கடும் நிபந்தனைகள் தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு நோட்டீஸ்

தமிழக சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவ கல்வி இயக்குனர் ஆகியோருக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
Published on

சென்னை,

மருத்துவ முதுகலை மற்றும் டிப்ளமோ படிப்புகளில் சேருபவர்கள் அரசு ஊழியர்கள் இருவரிடம் இருந்து உத்தரவாதம் பெறவேண்டும் என்ற நிபந்தனைகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிற்கு பதில் அளிக்கும்படி தமிழக சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவ கல்வி இயக்குனர் ஆகியோருக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் சரவணன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழக சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலாளரின் அறிவுறுத்தலின்படி, முதுகலை மருத்துவ படிப்பு மற்றும் டிப்ளமோ மருத்துவ படிப்புக்கான விளக்கக்குறிப்பேட்டில் கடுமையான நிபந்தனைகளை தமிழக மருத்துவ கல்வி இயக்குனர் விதித்துள்ளார்.

அதில், டிப்ளமோ மருத்துவ படிப்பில் சேருபவர்கள் ரூ.20 லட்சம் டெபாசிட் செய்யவேண்டும். விண்ணப்பதாரருக்கு இணையான அல்லது உயர் பதவியில் உள்ள 2 அரசு ஊழியர்கள் உத்தரவாதம் அளிக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல, மருத்துவ முதுகலை படிப்பில் சேரும் விண்ணப்பதாரர்கள், 2 அரசு ஊழியர்கள் உத்தரவாதத்துடன், ரூ.40 லட்சம் டெபாசிட் தொகை செலுத்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனை ஏழைகள் மற்றும் சமுதாயத்தில் பின்தங்கியவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இவர்களால் பெரும் தொகையை செலுத்த முடியாது. அதேபோல, இரு அரசு அதிகாரிகளிடம் இருந்து உத்தரவாதத்தையும் பெறமுடியாது. இந்த நிபந்தனை மருத்துவ படிப்பில் சேர விரும்பும் நபர்களுக்கு தேவையில்லாத சுமையாக அமைந்துள்ளது.

இந்த நிபந்தனையால், சில அரசு அதிகாரிகள் உத்தரவாதம் அளிக்க பெரும் தொகையை லஞ்சமாக கேட்கலாம். எனவே, இந்த நிபந்தனை நியாயமற்றது, சட்டவிரோதமானது, ஒருதலைபட்சமானது என்று அறிவித்து, அதை ரத்து செய்யவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர், விரிவான பதில் அளிக்கும்படி தமிழக சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை செயலாளர், மருத்துவ கல்வி இயக்குனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 15-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com