திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் கலெக்டர் ஆய்வு - சமூக இடைவெளியை கடைப்பிடிக்க பக்தர்களுக்கு அறிவுறுத்தல்

திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் செய்யப்பட்டுள்ள கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் அர்ஜூன் சர்மா ஆய்வு செய்தார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
Published on

காரைக்கால்,

கொரோனா ஊரடங்கு காரணமாக வழிபாட்டுத்தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் இருந்து வந்தனர். இந்தநிலையில் கடந்த 8-ந் தேதி முதல் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பக்தர்கள் கோவிலுக்கு வர அனுமதிக்கப்பட்டனர்.

அதன்பிறகு வரும் முதல் சனிக்கிழமையான நேற்று பிரசித்திபெற்ற திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி, பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் குறியீடு வரையப்பட்டு இருந்தது. கிருமி நாசினி மூலம் கை கழுவுவதற்கான தண்ணீர் வசதி உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதனை ஆய்வு செய்வதற்காக மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா நேற்று சனிபகவான் கோவிலுக்கு வந்தார். அங்கு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார். பின்னர் கோவில் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வின் போது துணை கலெக்டர் ஆதர்ஷ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதன்பின் நிருபர்களிடம் கலெக்டர் அர்ஜூன் சர்மா கூறும்போது, திருநள்ளாறு சனிபகவான் கோவிலுக்கு வரும் பக்தர்கள், அவசியம் முகக் கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கைகளை சுத்தம் செய்வதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்துள்ளது. மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி வசதிகளை செய்திருப்பது திருப்தி அளிக்கிறது. பக்தர்கள் மிக எளிமையான முறையில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்புகின்றனர் என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், மேட்டூர் அணை தற்போது திறக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாத இறுதியில் காரைக்காலுக்கு தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் 20 முக்கியமான கிராமப்புற பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படும் என்று கலெக்டர் அர்ஜூன் சர்மா தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com