கர்நாடகத்தில் நாளை முதல் நானும், சித்தராமையாவும் இணைந்து கூட்டு பிரசாரம் தேவேகவுடா பேட்டி

கர்நாடகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் நானும், சித்தராமையாவும் இணைந்து கூட்டு பிரசாரம் செய்ய உள்ளோம் என்று தேவேகவுடா கூறினார்.
கர்நாடகத்தில் நாளை முதல் நானும், சித்தராமையாவும் இணைந்து கூட்டு பிரசாரம் தேவேகவுடா பேட்டி
Published on

பெங்களூரு,

முன்னாள் பிரதமர் தேவேகவுடா, காங்கிரஸ் கூட்டணியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் துமகூரு தொகுதியில் போட்டியிடுகிறார். 86 வயதிலும் கொளுத்தும் வெயிலில் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நான் யாரை பற்றியும் தரக்குறைவாக பேச மாட்டேன். அவ்வாறு பேசும் பழக்கம் எனக்கு இல்லை. மத்திய செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் ஊடகங்களுக்கு ரூ.500 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதனால் பா.ஜனதாவின் சாதனைகள், தனிப்பட்ட பிரசாரத்தை ஒளிபரப்புவது போன்ற விஷயங்களை ஊடகங்கள் செய்கிறார்கள்.

பிரதமர் மோடி கர்நாடகத்தில் 6 இடங்களில் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளதாக சொல்கிறார்கள். பா.ஜனதா வேட்பாளர்கள், தங்களுக்கு ஓட்டுப்போடுங்கள் என்று கேட்பதற்கு பதிலாக மோடிக்கு வாக்களியுங்கள் என்று கேட்கிறார்கள். ஊடகங்களும் மோடிக்கு ஆதரவாக பேசுகின்றன.

நாளை (இன்று) ஆந்திராவுக்கு செல்கிறேன். சந்திரபாபு நாயுடு கட்சியின் பிரசாரத்தில் கலந்து கொள்கிறேன். 9-ந் தேதி (நாளை) முதல் நானும், சித்தராமையாவும் ஒன்றாக இணைந்து கூட்டு பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளோம். நாங்கள் வருகிற 13-ந் தேதி வரை ஆதரவு திரட்ட உள்ளோம்.

நாங்கள் என்ன செய்துள்ளோம், அவர்கள் என்ன செய்துள்ளனர் என்று கூறி நாங்கள் ஓட்டு கேட்கிறோம். இறுதியில் கர்நாடக மக்கள் என்ன முடிவு செய்கிறார்களோ செய்யட்டும்.

மண்டியா, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளில் வருமான வரி சோதனை நடந்துள்ளது. எல்லாம் எங்களுக்கு தெரியும். ஒடிசா, மேற்கு வங்காளத்திலும் இந்த சோதனை நடைபெற்றுள்ளது. தேவேகவுடா குடும்பத்தை இலக்காக வைத்துக்கொண்டு சோதனை நடத்துகிறார்கள்.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com