

டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற குடியரசுதின அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்றன. இதில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற அலங்கார ஊர்தியின் தலைப்பில் தமிழ் மொழியை தவிர்த்து இந்தி மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
இது பல்வேறு தரப்பினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்து வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
இது முற்றிலும் வதந்தி. டெல்லி குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்தியில் மொழிகள் எங்கு இடம்பெறவேண்டும் என்ற விதிமுறைகள் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தால் விதிக்கப்படும். ஊர்தியின் முன்பக்கத்தில் இந்தியும், பின்பக்கத்தில் ஆங்கிலமும், ஊர்தியின் இருபுறங்களில் மாநில மொழிகள் இடம்பெறும்.
இந்த விதிமுறைபடி, தமிழ்நாடு சார்பில் பங்கேற்ற அலங்கார ஊர்தியின் இருபுறங்களிலும் தமிழ் மொழியில் தமிழ்நாடு என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்மொழி இடம்பெறவில்லை என்றும், இந்திக்கு தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் கொடுத்ததாகத் தவறான தகவல் பரப்பப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.