காலாப்பட்டு
வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
பெற்றோர் கண்டிப்பு
புதுவை பெரிய காலாப்பட்டு பாரதியார் நகர் 1-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் ஆகாஷ் (வயது 19). பிளஸ்-2 வரை படித்த இவர், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த ஆகாஷ், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஷம் குடித்து தற்கொலை
திருபுவனை அருகே மதகடிப்பட்டு புதுநகர் குறிஞ்சி வீதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 37). இவரது மனைவி தேவி. இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். பெருமாளுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த பெருமாள், திருவண்டார் கோவில் ஏரிக்கு சென்று விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் மயங்கி விழுந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதகடிப்பட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர், மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.