கடைகள் திறக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் வர்த்தக சங்க நிர்வாகிகள் கோரிக்கை

கடைகள் திறக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று வர்த்தக சங்க நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.
Published on

கரூர்,

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எவ்வாறு கடைப்பிடிப்பது, சமூக இடைவெளியை பின்பற்றி விற்பனை செய்வது குறித்து கரூர் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் தலைமை தாங்கினார்.

இதில், போலீஸ் துணை சூப்பிரண்டு முகேஷ் ஜெயகுமார், பசுபதிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், கரூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வர்த்தக சங்க தலைவர் ராஜ், செயலாளர் வெங்கட்ராமன் உள்பட வர்த்தக சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வர்த்தக சங்க நிர்வாகிகள் பேசுகையில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ-பாஸ் முறை நிறுத்தப்பட்டுள்ளதை நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ளபடி அத்தியாவசிய கடைகள் திறக்கும் நேரத்தை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும், பிற கடைகளை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு, வர்த்தகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். பின்னர் அவர் கூறுகையில், தற்போதையை கொரோனா கால கட்டத்தில் அரசு சார்பிலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் அறிவிக்கப்படும் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

கடை உரிமையாளர்கள் மற்றும் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். கடைகளுக்கு வருபவர்களையும் முக கவசம் அணிய வலியுறுத்த வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com