மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்களை தகர்த்து எறிவோம் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆவேசம்

மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்களை தகர்த்து எறிவோம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆவேசமாக பேசினார்.
Published on

பாகூர்,

புதுவை சட்டசபைக்கு பா.ஜ.க.வை சேர்ந்த 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக செயல்படும் கவர்னர் கிரண்பெடி புதுவையை விட்டு வெளியேற வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

மணவெளி சட்டமன்ற தொகுதி வட்டார காங்கிரஸ் சார்பில் தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு கொறடா அனந்தராமன் தலைமை தாங்கினார். வட்டார காங்கிரஸ் தலைவர் ராமு முன்னிலை வகித்தார். மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு பேசியதாவது:-

நிதி கொடுப்பதில் காலதாமதம்

புதுச்சேரியில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி ஆட்சி, மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. தென் மாநிலங்களை பொறுத்தவரை, கர்நாடகா மற்றும் புதுச்சேரியில் தான் காங்கிரஸ் ஆட்சி இருக்கிறது. இது மத்திய பா.ஜ.க.வின் கண்ணை உறுத்துகிறது. மத்திய அரசு, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கிறது.

புதுச்சேரியில் தற்போதைய காங்கிரஸ் ஆட்சியில் ரூ.7 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் போட்டுள்ளோம். ரூ.4 ஆயிரம் கோடி வரி வசூல் செய்கிறோம். மீதி ரூ.3 ஆயிரம் கோடி மத்திய அரசு தரவேண்டும். ஆனால், மத்தியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 42 சதவீதமும், புதுவைக்கு 27 சதவீதமும் நிதி தரப்படுகிறது. ஆனால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது 70 சதவீதம் நிதியை பெற்றோம்.

போலிகளை கண்டு ஏமாற வேண்டாம்

மாநில அரசின் பரிந்துரை இல்லாமல் பா.ஜ.க.வை சேர்ந்த 3 பேரை நியமன எம்.எல்.ஏ.வாக நியமித்து உள்ளனர். அவர்களுடைய நியமன ஆணையில் தந்தை பெயர், முகவரி இல்லை. அதனால், அவர்களை ஏற்க மறுத்த சபாநாயகர் வைத்திலிங்கத்திற்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன். நியமன எம்.எல்.ஏ.க்களை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

ஆனால், அவர்கள் ஒவ்வொரு அலுவலகமாக சென்று தாங்கள் எம்.எல்.ஏ., என கூறி மிரட்டி வருகின்றனர். போலிகளை கண்டு ஏமாறவேண்டாம் என சில அலுவலகத்தில் போர்டு வைத்துள்ளார்களாம். இந்த விஷயத்தில், அவர்கள் அசலா, போலியா என நீதிமன்றம் தான் தீர்ப்பு அளிக்க வேண்டும்.

தகர்த்து எறிவோம்

ஏழை மக்களின் குடும்பத்திற்கு 100 யூனிட், விவசாயத்துக்கு இலவச மின்சாரம் தருகிறோம். கடந்த ஆட்சியில் இந்த திட்டம் உண்டா? என சிந்தித்துப் பாருங்கள். மத்தியில் இருந்து வரும் நிதியை கொண்டு இன்னும் பல மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். இதற்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்களை தகர்த்து எறிவோம். புதுச்சேரி மாநில மக்கள் ஏமாற்றுபவர்களை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

புதுச்சேரி மாநில மக்களுக்கு சேவை செய்வோம் என வந்த கவர்னர் கிரண்பெடி, அதனை மறந்து சில கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படுவதை எந்த காலத்திலும் ஏற்க முடியாது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் முதல்-அமைச்சரும், கவர்னரும் ஒன்றாகிவிட்டதாக கூறியுள்ளார். கவர்னரை அ.தி.மு.க. ஒருநாள் எதிர்க்கிறது, அடுத்தநாள் ஆதரிக்கிறது.

இதேபோல் என்.ஆர். காங்கிரசையும் ஒருநாள் எதிர்க்கிறது, அடுத்த நாள் ஆதரிக்கிறது. அம்மா அ.தி.மு.க. அக்கா அ.தி.மு.க. அண்ணன் அ.தி.மு.க. அப்பா அ.தி.மு.க. என பல பிரிவாக உள்ளது. தற்போது சித்தி அ.தி.மு.க.வும் உருவாகியுள்ளது.

இவ்வாறு முதல்வர் நாராயணசாமி பேசினார்.

கலந்துகொண்டவர்கள்

ஆர்ப்பாட்டத்தில், அமைச்சர் கந்தசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, பாலன் எம்.எல்.ஏ., டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், முன்னாள் அமைச்சர் ஏழுமலை, முன்னாள் எம்.எல்.ஏ. பக்கிரியம்மாள், ஐ.என்.டி.யு.சி. தலைவர் ரவிச்சந்திரன், புதிய நீதிக்கட்சி தலைவர் பொன்னுரங்கம், வட்டார காங்கிரஸ் செயல் தலைவர் சண்முகம், மாணவர் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com