களக்காடு,
நெல்லை மாவட்டம் வீ.கே.புரம் அருகேயுள்ள தட்டான்பட்டியை சேர்ந்த மரியபொன்னையா மகன் முத்துமாணிக்கராஜ்(வயது33). விவசாயி. இவரது மனைவி மகேஸ்வரி. இவர் களக்காடு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
இதனால், இவர் களக்காடு காந்திஜி தெருவில் வாடகை வீட்டில் தனியாக தங்கியிருந்து வேலைக்கு சென்று வருகிறார். கணவருடன் மகன், மகள் தட்டான்பட்டியில் வசித்து வருகின்றனர்.
புத்தாண்டை ஒட்டி வாழ்த்து சொல்வதற்காக முத்துமாணிக்கராஜ், கடந்த 1-ந் தேதி தனது நண்பர் அருள்செல்வத்துடன் களக்காட்டுக்கு வந்தார். அங்கு மனைவி தங்கியுள்ள வீட்டுக்கு நண்பருடன் அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது மகேஸ்வரி தங்கியிருக்கும் வீட்டின் அருகில் இருளில், களக்காடு சிவந்தி ஆதித்தனார்நகரை சேர்ந்த சகாயம் மகன் பிரபாகன் தனியாக நின்று கொண்டிருந்தார்.
இதை கவனித்த முத்தமாணிக்கராஜ், அவரிடம் சென்று, இங்கு தனியாக எதற்காக நிற்கிறீர்கள்? என பிரபாகரனிடம் கேட்டார். இதில் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில், முத்துமாணிக்கராஜின் கழுத்தை பிடித்து நெறித்தவாறு, கன்னத்தில் பிரபாகரன் சரமாரியாக அடித்து உதைத்தார். அத்துடன் அவருக்கு பிரபாகரன் கொலை மிரட்டலும் விடுத்தார்.
இதுகுறித்து முத்துமாணிக்கராஜ் களக்காடு போலீசாரிடம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர்.