ரியல் எஸ்டேட் அதிபரிடம் இருந்து பணத்தை திரும்ப பெற்று தரக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்

திருவாரூரில் ரியல் எஸ்டேட் தொழில் அதிபரிடம் இருந்து பணத்தை திரும்ப பெற்று தரக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ரியல் எஸ்டேட் அதிபரிடம் இருந்து பணத்தை திரும்ப பெற்று தரக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்
Published on

திருவாரூர்,

திருவாரூர் அருகே உள்ள கமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 40). தொழிலாளி. இவர் நேற்று காலை 10 மணி அளவில் திருவாரூர் வடக்கு வீதியில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனை அறிந்த அவருடைய மனைவி, நண்பர்கள் அங்கு திரண்டு வந்து பாண்டியனை கீழே இறங்கி வரும் படி கூறினர். ஆனால் அவர் இறங்கி வர மறுத்து விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் டவுன் போலீஸ் இனஸ்பெக்டர் அன்பரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தற்கொலை மிரட்டல் விடுத்தவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர், அதே பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவரிடம் வீட்டு மனைகள் வாங்க பலரிடம் இருந்து பணம் வசூல் செய்து கொடுத்தேன். ஆனால் அவர்களுக்கு வீட்டு மனைகளை அவர் தரவில்லை, பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. எனவே ரியல் எஸ்டேட் அதிபரை கைது செய்து பணத்தை திருப்பி வாங்கி தர வேண்டும். அதுவரைக்கும் கீழே இறங்க மாட்டேன் என பாண்டியன் தெரிவித்தார்.


சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படைவீரர்கள் வரவழைக்கப்பட்டனர். தற்கொலை மிரட்டல் விடுத்தவரை காண வடக்கு வீதியில் மக்கள் அதிகமாக கூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு போலீசாரின் பேச்சு வார்த்தையில் சமாதானம் அடைந்த பாண்டியன் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கினார். அவரை 108 ஆம்புலன்சின் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் பாண்டியன், ரியல் எஸ்டேட் அதிபரிடம், வீட்டு மனைகள் வாங்குவதற்காக பல்வேறு நபர்களிடம் இருந்து ரூ.3 கோடியே 67 லட்சம் வாங்கி கொடுத்துள்ளதாகவும், அந்த பணத்தை ரியல் எஸ்டேட் அதிபர் ஏமாற்றியிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com