பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு சிறையில் ‘பி’ வகுப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு சிறையில் ‘பி’ வகுப்பு அளிக்கப்பட்டுள்ளது. #NawazSharif
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு சிறையில் ‘பி’ வகுப்பு
Published on

இஸ்லாமாபாத்,

லண்டனில் ஊழல் பணத்தில் அவென்பீல்டு சொகுசு வீடுகள் வாங்கி குவித்த வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு, அவரது மகள் மரியம் நவாசுக்கு 7 ஆண்டு, மருமகன் கேப்டன் சப்தாருக்கு 1 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தேசிய பொறுப்புடைமை கோர்ட்டு கடந்த 6ந் தேதி தீர்ப்பு அளித்தது. கேப்டன் சப்தார் கைது செய்யப்பட்டு, ராவல்பிண்டி அடியலா சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் புற்றுநோயால் அவதியுற்று, லண்டன் மருத்துவமனையில் கோமா நிலையில் உள்ள மனைவி குல்சூம் நவாசை பார்க்கச் சென்றிருந்த நவாஸ் ஷெரீப்பும், மகள் மரியமும் நேற்று இந்திய நேரப்படி இரவு 9.15 மணிக்கு அபுதாபி வழியாக லாகூர் அல்லமா இக்பால் விமான நிலையத்தில் வந்து இறங்கினர். அங்கு அவர்கள் கைது செய்யப்பட்டு சிறப்பு விமானத்தில் இஸ்லாமாபாத் அழைத்துச்செல்லப்பட்டனர். அங்கு இருந்து பலத்த பாதுகாப்புடன் இஸ்லாமாபாத் அடியலா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு, அடைக்கப்பட்டனர். இரவை அவர்கள் சிறையில் கழித்தனர்.

சிறையில் நவாஸ் ஷெரீப்புக்கும், மகள் மரியம் நவாசுக்கும் பி வகுப்பு வழங்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு தலா ஒரு கட்டில், ஒரு நாற்காலி, ஒரு டீ பாத்திரம், ஒரு விளக்கு வழங்கப்பட்டு உள்ளது. டி.வி., குளுகுளு சாதனம், குளிர்பதனப்பெட்டி செய்தித்தாள் வேண்டுமென்றால் அது குறித்து சிறை அதிகாரிகளின் அனுமதி பெற்று, பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, அஜிசியா இரும்பு ஆலை ஊழல் வழக்கு உள்ளிட்ட வழக்குகள் நவாஸ் ஷரிப் மீது நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை சிறைக்குள் வைத்தே விசாரிக்க பொறுப்புடைமை நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. ஆனால், இதற்கு பிஎம்.எல்-என் கட்சி தலைவர் ஷெபாஸ் ஷெரீப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பயங்கரவாதிகளுக்கு எதிரான வழக்குகள் மட்டுமே சிறைச்சாலைக்குள் வைத்து விசாரிக்கப்படும். எனவே, நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான வழக்கு சிறைக்குள்ளே விசாரிக்கப்படும் என்பது முற்றிலும் தவறானது என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com