

கீவ்,
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 22-வது நாளாக தாக்குதல் வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.
இதனால், உக்ரைன் - ரஷிய படைகள் இடையே தீவிர சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அவை தோல்வியிலேயே முடிகின்றன.
இந்த நிலையில் கிழக்கு உக்ரைனில் உள்ள மெரேபா நகரத்தில் ரஷிய படைகள் இன்று நடத்திய ஷெல் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 25 பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் வழக்கறிஞர்கள் தங்களுடைய பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
கார்கிவ் நகருக்கு வெளியே உள்ள மெரேபா நகரத்தில் உள்ள ஒரு பள்ளி மற்றும் கலாச்சார மையத்தின் மீது இன்று அதிகாலையில் ரஷியா பீரங்கி தாக்குதல் நடத்தியதாக அவர்கள் தங்களுடைய பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் காயமடைந்தவர்களில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கார்கிவ்விலிருந்து வடக்கே சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மெரேபா, கடந்த சில நாட்களாக நடந்த தீவிரமான வான்வழித் தாக்குதல்களால் கடுமையாக சேதமடைந்துள்ளது.