அமெரிக்காவை பந்தாடிய பயங்கர புயல்; பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு

அமெரிக்காவை பந்தாடிய பயங்கர புயல் காற்றால் 21 பேர் பலியாகினர். 2 லட்சத்துக்கு அதிகமானோர் மின்சாரம் இன்றி தவிக்கின்றனர்.
அமெரிக்காவை பந்தாடிய பயங்கர புயல்; பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் பல மாகாணங்களில் கடந்த சில மாதங்களாக பனிப்புயல், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் ஏற்படும் பாதிப்புகளின் தீவிர தன்மையை குறைக்க அரசாங்கம் சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக வருகிற 10-ந் தேதி வரை வானிலை ஆய்வு மையம் சார்பில் அங்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த புயல் காற்று வீசியது. இதனால் ஆர்கன்சாஸ், ஒக்லகாமா, இல்லினாயிஸ், டென்னசி, அயோவா, மிசிசிபி உள்ளிட்ட மாகாணங்கள் பலத்த பாதிப்புக்கு உள்ளாகின.

ஏராளமான வீடுகள் மற்றும் அலுவலகங்கள் சேதம் அடைந்தன. மேலும் ஏராளமான மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் பல நகரங்கள் இருளில் மூழ்கின. 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இன்றி தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இதேபோல் சாலைகளில் விழுந்த மரங்களால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. எனவே மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து மீட்பு படையினர் அங்கு சாலைகளில் விழுந்த மின் கம்பங்கள் மற்றும் மரங்களை அகற்றி வருகின்றனர்.

இந்த புயல் காற்றுக்கு நாடு முழுவதும் இதுவரை 21 பேர் பலியாகி உள்ளனர். இதில் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் மட்டும் 4 பேர் உயிரிழந்ததாகவும், ஏராளமானோர் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் மாகாண கவர்னர் சாண்டர்ஸ் அங்கு அவசர நிலையை அறிவித்தார். மேலும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அவர் தனது அறிக்கையில் கூறினார்.

இதேபோல் இல்லினாய்ஸ் மாகாணம் பெல்விடேரில் ஒரு தியேட்டரின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அப்போது அங்கு 200-க்கும் மேற்பட்டோர் சினிமா பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அதில் ஒருவர் மீது மேற்கூரை விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 28 பேர் படுகாயம் அடைந்தனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த புயல் காற்றால் மேற்படி மாகாணங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com