

புதுடெல்லி,
பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் தடுப்பூசி இந்தியா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. இதன் அவசர பயன்பாட்டுக்கு உலக சுகாதார நிறுவனமும் அனுமதி அளித்துள்ளது.
ஆனால் இந்த தடுப்பூசியை அமெரிக்கா இன்னும் ஏற்கவில்லை. அங்கு 3-ம் கட்ட மருத்துவ பரிசோதனையில் கோவேக்சின் இருந்தபோது, இந்த பரிசோதனைகளுக்கு அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான எப்.டி.ஏ. கடந்த நவம்பர் மாதம் தடை விதித்தது.
இந்த தடை கடந்த மாதத்தில் விலக்கப்பட்டது. இதன் மூலம் தடுப்பூசியின் பரிசோதனை நடவடிக்கைகள் மீண்டும் தொடர்ந்து, பயன்பாட்டுக்கு வரும் வாய்ப்பும் ஏற்பட்டு உள்ளது என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்து இருந்தது. அமெரிக்காவில் கோவேக்சினை ஆகுஜன் நிறுவனம் பிபிவி152 என்ற பெயரில் தயாரித்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் கோவேக்சின் மருத்துவ பரிசோதனைகளுக்கு அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து பாரத் பயோடெக் மற்றும் ஆகுஜன் நிறுவனம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கோவேக்சின் தடுப்பூசிக்கான மருத்துவ பரிசோதனைகளுக்கு அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் அமெரிக்காவிலும் கனடாவிலும் அனைத்து வயதினருக்கும் கோவாக்சின் தடுப்பூசியை கொண்டு வருவதற்கான தங்களுடைய உறுதிபாட்டையும் வெளிப்படுத்தியுள்ளது.