பிரேசிலில் புயல்: பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு

பிரேசிலில் ஏற்பட்ட புயலில் சிக்கி இதுவரை 36 பேர் பலியான நிலையில் ஒரே வீட்டில் இருந்து 15 பேர் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது.
பிரேசிலில் புயல்: பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு
Published on

பிரேசிலியா,

தென் அட்லாண்டிக் பெருங்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக வலுப்பெற்றது. இது தென் அமெரிக்க நாடான பிரேசில் நோக்கி மெதுவாக நகர்ந்து சென்றது. இதனால் நாட்டின் தென்மாகாணங்களான கிராண்ட்டோ சுல் மற்றும் சான்டா கத்தரினா ஆகியவற்றின் கடற்கரை நகரங்களில் கனமழை பெய்ய ஆரம்பித்தது.

இடைவிடாத கனமழை

பின்னர் இந்த புயல் தீவிரமாக மாறியது. அதிதீவிரமாக உருவான இது வெப்ப மண்டல புயலாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் வகைப்படுத்தினர். இதனால் இடைவிடாமல் கனமழை பெய்தது.

தொடர் மழை காரணமாக ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. மியூகம், லஜியாடோ மற்றும் ரோகா சேல்ஸ் உள்ளிட்ட தென்மாகாணங்களின் 65-க்கும் மேற்பட்ட நகரங்கள் புயல் பாதிப்புக்குள்ளாகின. புயலில் வீடுகள் பல அடித்துச் செல்லப்பட்டன. இதனால் லட்சக்கணக்கானோர் அடிப்படை தேவைகளின்றி கடும் சிரமத்திற்கு உள்ளனர்.

ஒரே வீட்டில் 15 பேர் உடல்கள்

கடந்த ஒருவாரமாக பெய்துவரும் பேய்மழை காரணமாக 30 பேர் இறந்தநிலையில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாட்டின் ராணுவத்துடன் இணைந்து பேரிடர் மீட்புத்துறையினர் மீட்புப்பணிகளில் ஈடுபடுகிறார்கள். இந்தநிலையில் பேரிடர் மேலாண்மை இலாகா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி பலி எண்ணிக்கை 36-ஆக அதிகரித்துள்ளது. மியூகம் நகரில் ஒரு வீட்டில் மீட்புப்பணிகளில் ஈடுபட்டபோது குழந்தைகள் உள்பட 15 பேர் உடல்கள் மீட்கப்பட்டது அதிர்ச்சி அளித்துள்ளது.

நிவாரணப்பணி

இதுகுறித்து ரியோ கிராண்ட்டோ சுல் மாகாண கவர்னர் எட்வர்டோ லைட் கூறுகையில் "பருவநிலை மாற்றம் காரணமாக மாகாணங்களில் உயிர்ப்பலி அதிகரித்து வருகிறது. பிரேசில் அதிபர் லுலு டா சில்வாவிடம் நிவாரண பணிகளை மேற்கொள்ளும் வகையில் உதவி கோரப்பட்டுள்ளது'' என்றார்.

இந்தநிலையில் அதிபரின் உத்தவின்பேரில் துணை அதிபர் ஜெரால்டோ அல்க்மின் உடன் இரு இலாகா மந்திரிகள் ரியோ கிராண்ட்டோ சுல் விரைந்தனர். புயலால் சேதமான பகுதிகளை நேரில் பார்வையிட்டு வெள்ள நிவாரணப்பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டனர்.

வரும் நாட்களில் மழைபொழிவு அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபடுகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com