ஜப்பானில் கொரோனா பாதிப்பு உயர்வு: 3 வாரங்களுக்கு அவசரகால நிலை நீட்டிப்பு

ஜப்பானில் வருகிற 11ந்தேதி முதல் 31ந்தேதி வரை 3 வாரங்களுக்கு அவசரகால நிலை நீட்டிக்கப்படுகிறது என அரசு உத்தரவிட்டு உள்ளது.
ஜப்பானில் கொரோனா பாதிப்பு உயர்வு: 3 வாரங்களுக்கு அவசரகால நிலை நீட்டிப்பு
Published on

டோக்கியோ,

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா பரவலால் இ்ந்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இதன்படி, வருகிற ஜூலை 23ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 8ந்தேதி வரை போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்டு 24ந்தேதி தொடங்கி செப்டம்பர் 5ந்தேதி வரை நடைபெறும்.

ஜப்பான் நாட்டில் கொரோனா பாதிப்புக்கான 4வது அலை வீசி வருகிறது. இதனால் டோக்கியோ மற்றும் ஒசாகா ஆகிய பெருநகர பகுதிகள் உள்பட 10 மாகாணங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன.

அந்நாட்டு பிரதமர் யோஷிஹிடே சுகா, கடந்த ஏப்ரல் 25ந்தேதி முதல் மே 11ந்தேதி வரை 4 மாகாணங்களில் அவசரகால நிலைக்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறினார்.

இதன்படி, டோக்கியோ, ஒசாகா, கியோட்டோ மற்றும் ஹியோகோ ஆகிய மாகாணங்களில் மக்களின் போக்குவரத்து குறையும் வகையில் குறைந்த கால அளவுக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்றும் கூறினார்.

இதனால் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் மற்றும் சேவைகள் தவிர்த்து மற்ற செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மிக பெரிய வணிக வளாகங்கள் உள்ளிட்டவை செயல்பட அனுமதிக்கப்படவில்லை. மதுபான கூடங்களும் மூடப்பட்டன. மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஜப்பான் மக்கள் தொகையில் இதுவரை 1 சதவீதம் பேருக்கே பைசர் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதனால் மற்ற நாடுகளை விட தடுப்பூசி போடுவதில் அந்நாடு பின்தங்கிய நிலையிலேயே உள்ளது என கியோடோ நியூஸ் தெரிவித்தது.

தொடர்ந்து, டோக்கியோ, ஒசாகா ஆகிய மாகாணங்களில் புதிய பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதுவரை அந்நாட்டில் 6.18 லட்சம் பேர் பாதிப்படைந்தும், 10,585 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

இதுபற்றி பெருந்தொற்று நடவடிக்கைகளுக்கான பொறுப்பு வகிக்கும் அந்நாட்டு பொருளாதார மந்திரி யசுடோஷி நிஷிமுரா கூறும்பொழுது, கடுமையான அவசரகால நிலை உத்தரவால் கொரோனாவின் 4வது அலை கட்டுப்படும் என அரசு நம்பிக்கை கொண்டிருந்தது.

ஆனால், டோக்கியோ, ஒசாகா ஆகிய மாகாணங்களில் புதிய பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. அதனால், ஜப்பானில் அவசரகால நிலையானது வருகிற 11ந்தேதி முதல் 31ந்தேதி வரை 3 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com