உக்ரைன் நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் சுட்டுக்கொலை; அதிர்ச்சி சம்பவம்

2016 முதல் 2019 வரை உக்ரைன் நாடாளுமன்ற சபாநாயகராக செயல்பட்டுள்ளார்.
கீவ்,
உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 284வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் உக்ரைன், ரஷியாவில் முக்கிய அரசியல் தலைவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்து வருகின்றனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இதனிடையே, உக்ரைன் நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் ஆண்ட்ரி வேலோடிமிரோவிச் பருபிய். இவர் 2016 முதல் 2019 வரை உக்ரைன் நாடாளுமன்ற சபாநாயகராக செயல்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஆண்ட்ரி வேலோடிமிரோவிச் நேற்று மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். உக்ரைனின் லிவீவ் மாகாணம் பிராங்க்ஸ்வி மாகாணத்தில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் ஆண்ட்ரி வேலோடிமிரோவிச் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஆண்ட்ரியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பியோடிய நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






