ரஷியாவில் அரசு அதிகாரிகள் ஆப்பிள் ஐபோன் பயன்படுத்த தடை விதிப்பு

ஐபோன்கள் மற்றும் ஐபேடுகளை வேலை நோக்கங்களுக்காக ரஷிய அரசு அதிகாரிகள் பயன்படுத்த கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
ரஷியாவில் அரசு அதிகாரிகள் ஆப்பிள் ஐபோன் பயன்படுத்த தடை விதிப்பு
Published on

மாஸ்கோ,

உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா தனது படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. உக்ரைன் மீதான ஆக்ரமிப்பை அடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆப்பிள் நிறுவனம் ரஷியாவிலிருந்து வெளியேறியதுடன் விற்பனையையும் நிறுத்தியது. இருப்பினும் வேறு நாடுகளிலிருந்து ரஷியாவிற்கு ஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபேடு சாதனங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது.

இதனிடையே ரஷிய மக்களால் பயன்படுத்தப்படும் ஆப்பிள் நிறுவன சாதனங்கள் மூலம் நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக ரஷியாவின் முக்கிய உள்நாட்டு பாதுகாப்பு சேவை அமைப்பான எஃப்.எஸ்.பி. குற்றம் சாட்டியிருந்தது. இதில் ஆப்பிள் நிறுவனமும், அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமையும் இணைந்து செயல்படுவதாக எஃப்.எஸ்.பி. தெரிவித்தது.

இதனையடுத்து ரஷிய டிஜிட்டல் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் ஒரு சுற்றறிக்கையில், "ஐபோன் மற்றும் ஐபேடு மூலமாக அமெரிக்கா, ரஷிய மக்களின் தகவல் தொடர்புகளை அறிந்து கொள்ளும் ஆபத்து இருக்கிறது. இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே ஐபோன்கள் மற்றும் ஐபேடுகளை வேலை நோக்கங்களுக்காக ரஷிய அரசு அதிகாரிகள் இனி பயன்படுத்த கூடாது.

பணி பயன்பாடுகளுக்கான செயலிகளை உபயோகப்படுத்தவும், வேலை சம்பந்தமான மின்னஞ்சல் பரிமாற்றத்தை செய்யவும், ஆப்பிள் நிறுவன ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளை பயன்படுத்த கூடாது. தனிப்பட்ட தேவைகளுக்காக ஐபோன்களைப் பயன்படுத்தலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த குற்றச்சாட்டுகளை ஆப்பிள் நிறுவனம் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com