

இஸ்லமாபாத்,
பாகிஸ்தான் ராணுவத்தின் விருப்படியே இம்ரான் கான் செயல்படுவார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சசிதரூர் எம்.பி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பேசியதாவது, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை எனக்கு நீண்ட காலமாகத் தெரியும். அவர் மிகவும் நல்ல மனிதர். ராணுவத்தின் பின்புலத்துடனேயே அவர் பிரதமர் பதவியில் அமர்ந்துள்ளார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தியாவுடன் அமைதி பாராட்ட பாகிஸ்தான் ராணுவம் முடிவு செய்தால் அதற்கு இம்ரான் கான் உதவியாக இருப்பார். இந்தியாவுடன் விரோதம் நீடிக்க ராணுவம் விரும்பினால் அதற்கும் இம்ரான் உரத்த குரலாக இருப் பார். இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதி ஏற்படுவதற்கான வாய்ப்பை பாகிஸ்தான் ராணுவம் எடுக்கும் முடிவே தீர்மானிக்கிறது. கடந்த 70 ஆண்டு களாக பாகிஸ்தானுடன் இந்தியாவுக்கு ஏற்பட்ட அனுபவம் இதை காட்டுகிறது.
இந்தியாவில் அரசின் கையில் ராணுவம் உள்ளது. பாகிஸ்தானில் ராணுவத்தின் கையில் அரசு உள்ளது. பாகிஸ்தானை அந்நாட்டு ராணுவம் 32 ஆண்டுகள் நேரடியாகவும் 38 ஆண்டுகள் மறைமுகமாக வும் ஆட்சி புரிந்துள்ளது. இந்தியாவுடன் அமைதி ஏற்படுத்திக் கொள்ள பாகிஸ்தான் அரசு விரும்பியபோதெல்லாம் எல்லையில் தாக்குதல் அல்லது தீவிரவாத தாக்குதல் மூலம் அதை ராணுவம் சீர்குலைத்துள்ளது இவ்வாறு அவர் கூறினார்.